டில்லி
சமீபத்தில் நடந்த பணியாளர் தேர்வின் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளியான விவகாரத்தில் சம்மந்தப்பட்ட அமைச்சரை பதவி நீக்கம் செய்து சட்ட நடவடிக்கைகள் எடுக்கக் கோரி காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி உள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் பணிக்கு ஊழியர்களை தேர்ந்தெடுத்து வருகிறது. இந்த ஆணையம் தேர்வு நடத்தில் அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் அதிகம் மதிப்பெண் பெற்றோரை நேர்காணல் நடத்தி அரசு பணியாலர்களாக பணியில் அமர்த்துகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற இருந்த தேர்வின் வினாத்தாள் வெளியானது பரபரப்பை உண்டாக்கியது.
இந்த ஆணையம் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இதனால் அவரை பதவி நீக்கம் செய்யவும், வினாத்தாள் வெளியானது குறித்து சட்டபூர்வமான விசாரணை மற்றும் நடவடிக்கைகள் எடுக்கக் கோரி காங்கிரஸ் கட்சி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, “பாஜக நாடெங்கும் வியாபம் வைரசை பரப்பி வருகிறது, (வியாபம் தேர்வில் ஊழல் நடந்தது குறித்து இன்னும் வழக்கு நடந்து வருகிறது) பணியாளர் தேர்வு ஆணையத் தேர்வுகளில் வினாத்தாள் வெளியாவது, போலி தேர்வாளர்கள், ஏமாற்று வேலைகள் ஆகியவைகளால் பல இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.
இந்த ஆணையம் நடத்தும் மற்றும் நடத்திய அனைத்து தேர்வுகள் குறித்தும் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். அதற்கு அமைச்சர் ஜிதேந்திர சிங் நிச்சயம் தடையாக இருப்பார். அதனால் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். இந்த விவகாரத்திலாவது பிரத்மர் தலையிடுவாரா அல்லது இதிலும் தனது மௌன விரதத்தை கடை பிடிப்பாரா என தெரியவில்லை” எனக் கூறி உள்ளார்.