கரூர்: கரூரில் காந்தி சிலை அகற்றப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்திய எம்.பி. ஜோதிமணி வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் சுமார்  70 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 1954-ம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் அரசு சார்பில் காந்தி சிலை நிறுவப்பட்டது.  பழமை வாய்ந்த, அந்த  காந்தி சிலைக்கு காந்தி பிறந்தநாள், நினைவு நாள் மற்றும் முக்கிய நாட்களின்போது அரசியல் கட்சியினர் மற்றும் பொது நல அமைப்பினர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

அந்த பழமையான சிலையை அகற்றி அதற்கு பதிலாக புதியதாக காந்தி சிலை அமைக்கபட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, நேற்று முன்தினம் இரவு அங்கு இருந்த காந்தி சிலை திடீரென அகற்றப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காங்கிரஸ் கட்சியினர் அங்கு திரண்டனர். இரவோடு இரவாக காந்தி சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் எம்.பி. ஜோதிமணியும் விரைந்து வந்து. காந்தி சிலை அகற்றப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் குதித்தார்.  அவரையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் காவல்துறையினர் கைது செய்துஅழைத்துச் சென்றனர்.

70 ஆண்டுகள் பழமையான சிலையை அகற்றிவிட்டு, முதல்வர் புதிதாக திறப்பதற்காக அவசரகதியில் இரவோடு இரவாக தரமற்ற நிலையில் காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது என ஜோதிமணி குற்றம்சாட்டினார். தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டதால்,   லைட்ஹவுஸ் ரவுண்டானா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், டவுன்போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மகாத்மா காந்தி சிலை எதற்காக அகற்றப்பட்டது?, அகற்றப்பட்ட சிலை எங்கே? என்று கேள்வி எழுப்பினர்.  அதற்கு போலீசார் அகற்றப்பட்ட சிலை நகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளதாகவும், அகற்றப்பட்ட இடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு காந்தி சிலை மீண்டும் அமைக்கப்படும் என்று கூறினர்.

பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து,  காந்திசிலை அகற்றப்பட்ட இடத்தை பார்வையிட்ட ஜோதிமணி, இன்றைக்குள் (சனிக்கிழமை) சிலையை மீண்டும் வைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.