டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், மணிப்பூர் பிரச்னையை நாடாளுமன்றத்தில் இன்று எழுப்புவோம் என்றும், அதற்கு நோட்டீஸ் கொடுத்துள்ளோம் என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்து உள்ளார். மணிப்பூர் நிலவரங்கள் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு பல மசோதாக்களை அறிமுகப் படுத்த உள்ளது. அதே வேளையில் நாட்டில் நிலவும் விலைவாசி பிரச்சினை, மணிப்பூர் வன்முறை, பொதுசிவில் சட்டம், வேலையில்லா திண்டாட்டம், எதிர்க்கட்சிகளை ஒடுக்க விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளனர். இதனால், இந்த தொடர் அமளி துமளிப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ள நாடாளுமன்றம் வந்த பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், “இன்று, இந்த ஜனநாயகக் கோவிலில், சவான் மாசத்தில் நாம் கூடும் போது, அனைத்து எம்.பி.க்களும், மக்கள் நலனுக்காக இதைப் பயன்படுத்தி, எம்.பி.க்களாக தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன்…” என்றார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் பேசும்போது, மணிப்பூர் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்ப உள்ளோம். நானும் நோட்டீஸ் கொடுத்துள்ளேன். மணிப்பூரில் நடைபெற்று வரும் இனக்கலவரங்கள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் மக்களவை எம்பி மணீஷ் திவாரி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். அதை எழுப்ப எங்கள் தலைவர் (ராஜ்யசபா) அனுமதி வழங்குவாரா இல்லையா என்று பார்ப்போம். இந்த பிரச்சினையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் பிரதமர் மவுனம் காக்கிறார். 38 கட்சிகளை (என்.டி.ஏ. கூட்டத்திற்கு) அழைக்க உங்களுக்கு நேரம் இருக்கிறது, ஆனால் உங்களுக்கு (பிரதமருக்கு) அங்கு செல்ல நேரமில்லையா என கேள்வி எழுப்பினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் , “நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், மணிப்பூர் நிலவரங்கள் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக கூறப்பட்டது. விவாதத்திற்கான தேதியை சபாநாயகரும், ராஜ்யசபா தலைவரும் முடிவு செய்வார்கள்” என்றார்.