டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இன்று பதவி ஏற்கும் மல்லிகார்ஜுன கார்கே காலை காந்தி சமாதியில் மரியாதை செலுத்தினார்.
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். அதைத் தொடர்ந்து கட்சிக்கு நிலையான தலைவர் இல்லாமல் தள்ளாடியது. சோனியா காந்தி இடைக்கால தலைவராக நீடித்து வந்தார். இதனால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து தலைமைப் பதவிக்கான தேர்தலும் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் காந்தி, மற்றும் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட மறுத்து விட்டனர். இதனையடுத்து தலைவர் பதவியை பிடிக்க மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் போட்டியிட்டனர். ஆனால், தேர்தலில், 7, 897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1000 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
இதைத்தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு, காந்தி குடும்பத்தினர் அல்லாத கார்கே தலைவராக தேர்வு பெற்றுள்ளார். அவர் இன்று கட்சியின் தலைவராக பொறுப்பேற்கிறார். இதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் கோலாகலமாக காணப்படுகிறது.
முன்னதாக, மல்லிகார்ஜுன கார்கேடெல்லியில் ராஜ்காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்கு நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.