சென்னை: தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும் என முன்னாள் மத்திய அமைச்சரம், மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பார்வையாளருமான வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல்களம் சூடுபிடித்து வருகிறது. திமுக பிடிக்க திமுகவும், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள அதிமுகவும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. இதற்கிடையில், கூட்டணி, தொகுதி உடன்பாடு போன்றவைகளும் ரகசியமாக பேசப்பட்டு வருகின்றன.
கடந்த 2019ம் ஆண்டு ஏற்பட்ட திமுக, அதிமுக தலைமையிலான தேர்தல் கூட்டணியே சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு அகில இந்திய காங்கிரஸ் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர் வீரப்ப மொய்லி கூறியதாவது,
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்; திமுக கூட்டணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் பணியாற்ற காங்கிரஸ் தலைமை பணித்துள்ளது என் கூறினார்.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் ஆயுட்காலம் வரும் மே மாதத்தில் முடிவடைய உள்ளதால், அதற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் எழுந்துள்ளது. இதன் காரணமாக, தேசிய மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. மாநில காங்கிரஸ் கட்சிக்கு,
தேர்தல் பிரசார பார்வையாளர்களையும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா அறிவித்து உள்ளார்.
அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கு, கட்சியின் தேர்தல் பிரசார பார்வையாளர்களாக கட்சியின் மூத்த தலைவர்களும், முன்னாள் மத்திய மந்திரிகளுமான வீரப்ப மொய்லி, பல்லம் ராஜு, மராட்டிய மந்திரி நிதின் ராவத் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.