டெல்லி: மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட 5 மாநிலத் தேர்தல் தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய செயற்குழு இன்று கூடுகிறது. இந்த கூட்டம் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நடத்தப்பட்டு, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக மல்லிகாா்ஜுன காா்கே தோ்வு செய்யப்பட்ட பிறகு, இந்த ஆண்டு புதிய செயற்குழு மாற்றி அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, புதிய செயற்குழுவின் முதல் கூட்டம் இன்று பிற்பகல் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கூடுகிறது.
மோடி அரசு, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைதொடரை திடீரென கூட்டியுள்ளது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த ஆண்டு நடைபெற உள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தல், அதாவது மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது தொடர்பாகவும், இன்றைய செயற்குழுவில் ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள 90 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 159 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, இன்றைய செயற்குழு கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்கள் 84 பேரும், சிறப்பு அழைப்பாளர்கள் 149 பேரும் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் செயற்குழுவின் உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, நாளை காங்கிரஸ் சார்பில் தெலங்கானாவில் மாபெரும் பேரணி ஒன்றும் நடைபெற உள்ளது. இந்த பேரணியில், தெலங்கானா சட்டமன்ற தேர்தல் தொடர்பாக முக்கிய வாக்குறுதிகள் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.