டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்றம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். டெல்லியில் உள்ள விஜய் சவுக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இன்று காலை அக்கட்சியின் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் கடந்த 10 நாட்களாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் 3 கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து வரும் 31ம் தேதி முதல் ஏப்ரல் 7ம் தேதி வரை 3 கட்ட போராட்டங்கள் நடத்த உள்ளது. அதன்படி முதல்கட்ட போராட்டம் இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது.
நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியேயும், பொது இடங்களிலும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழ் நாட்டிலும் இன்று காலை 11 மணிக்கு போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தின்போது, எரிவாயு சிலிண்டர்களுக்கு மாலை அணி வித்தும், டிரம்ஸ், மணி உள்ளிட்ட இசை கருவிகளை அடித்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் இன்று காலை டெல்லியில் பாராளுமன்றம் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காலி சமையல் எரிவாயு சிலிண்டர்களையும், வாகனங்களை கவிழ்த்து போட்டும் போராட்டம் நடத்தினர். மத்தியஅரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களையும், எரிபொருள் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியிறுத்தினர்.
காங்கிரஸ் கட்சியின் அடுத்தக்கட்ட போராட்டம் ஏப்ரல் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை மாவட்ட தலைநகரங்களிலும், 7ம் தேதி அனைத்து மாநில தலைநகரங்களிலும் தர்ணா, பேரணி நடத்தப்பட உள்ளது.