திருவனந்தபுரம்

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிய கேரள மீனவர்களுக்கு நோபல் பரிசு வழங்க காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசிதரூர் பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளார்.

கடந்த வருடம் கேரளாவில் கனமழை காரணமாக வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. லட்சக்கணக்கானோர் தங்கள் வீடு உள்ளிட்ட பொருட்களை இழந்தனர். ஏராளமான கால்நடைகளும் பயிர்களும் அழிந்தன. மக்கள் பெரிதும் தவித்தனர். இந்நிலையில் கேரள மீனவர்கள் தங்கள் சொந்தப் படகுகளுடன் சென்று பலரை காப்பாற்றினர். இதனால் கேரள மக்கள் அவர்களை சூப்பர் ஹீரோக்கள் என புகழ்ந்தனர்.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு பொது நிகழ்வில் கேரள அரசு வெள்ளத்தில் உதவிய மீனவர் ஒவ்வொருவருக்கும் ரூ. 3000 அளித்தது. அதை அளித்த கேரள முதல்வர் பிணராயி விஜயன்,”வெள்ளத்தில் உதவ சென்ற மீனவர்களுக்கு இது போல் பரிசு கிடைக்கும் என அப்போது தெரியாது. தங்கள் படகுடன் பத்திரமாக திரும்புவோமா என்பதும் தெரியாது. அதை எல்லாம் யோசிக்காமல் மக்களை காக்கும் ஒரே நோக்கத்துடன் அவர்கள் பணியில் இறங்கினார்கள்” என புகழாரம் சூட்டினார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் மக்களவை உறுப்பினருமான சசி தரூர் நார்வே நாட்டை சேர்ந்த நோபல் குழுவின் தலைவர் பெரிட் ரெஜஸ் ஆண்டர்சன் க்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் சசி தரூர், “கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. அப்போது கேரள மீனவர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது நிவாரணப் பணியில் இறங்கினார்கள்.

அவர்களுடைய இல்லங்களும் அப்போது வெள்ளத்தில் மூழ்கி இருந்தன. ஆயினும் அவர்கள் அதை பொருட்படுத்தவிலை.  அவர்கள் வெள்ளத்தில் சிக்கிய முகமறியா மக்களைக் காக்க தங்கள் சொந்த படகுடன் சென்றனர். அதை ஒட்டி அவர்களுக்கு அரசு ரொக்கப் பரிசு அளித்தது. அதையும் பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர்.

அதிலும் அப்போது வெளி வந்த ஒரு புகைப்படத்தில் ஒரு மீனவர் வெள்ளத்தில் சிக்கிய ஒரு வயதான பெண் படகில் ஏற உதவும் வகையில் மண்டி இட்டு அவரை தன் முதுகில் ஏறச் சொல்லி உள்ள புகைப்படம் வெளியாகியது.   இந்த புகைப்படம் அந்த மீனவர்கள் எந்த அளவுக்கு உதவினார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டாகும்.

இதை எல்லாம் மனதில் கொண்டு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். அவர்களுடைய தன்னலமற்ற சேவையை பாராட்ட வேண்டி அவர்களுக்கு 2019 ஆம் வருடத்துக்கான நோபல் பரிசை வழங்குமாறு கோரிக்கை விடுக்கிறேன். அவர்களுடைய சேவைக்கு மாநில மக்களும் நாட்டு மக்களும் நன்றியை தெரிவித்துள்ளனர். அதே போல் உலக அளவில் அவர்களுக்கு இது ஒரு அங்கீகாரத்தை அளிக்கும்” என எழுதி உள்ளார்.