பார்பேட்டா
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் காலிக் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
அசாமில் மொத்தம் 14 மக்களவை தொகுதிகள் உள்ளன. இவற்றில் காங்கிரஸ் கட்சிக்கு 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்த நிலையில், இதில் 2 பேருக்கு வரும் 2024 மக்களவை தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் காலிக்கிற்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
கடந்த முறை அவர் வெற்றி பெற்ற பார்பேட்டா தொகுதியில், இந்த முறை தீப் பயான் என்பவரைக் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக களமிறக்கியுள்ளது. அப்துல் காலிக் ஏற்கனவே இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ள்லார் தற்போது தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர் அதிருப்தியில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இன்று காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அப்துல் காலிக் ராஜினாமா செய்துள்ளார். அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். கடிதத்தில், காங்கிரஸ் கட்சியின் மாநில மற்றும் தேசிய தலைமைகளின் நடவடிக்கைகள் காரணமாக அசாமில் காங்கிரஸ் மீதான எதிர்பார்ப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.