டில்லி:

டில்லி அரசியல் விவகாரங்களில் அரிதான கருத்தொற்றுமை இருப்பதால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூட்டும் அனைத்து கட்சி கூட்டங்களில் காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். ஆனால், பாஜக இக்கூட்டங்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

கடைகளுக்கு சீல் வைக்கும் சம்பவம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் இன்று டில்லியில் நடந்தது. இதன் பின்னர் முதல்வர் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில்,‘‘ஒரு நல்ல கூட்டம் காங்கிரஸ் கட்சியுடன் நடந்தது. இதை பாஜக புறக்கணித்தது. டில்லி வர்த்தகர்களின் நலன் கருதி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்’’ என்று தெரிவித்துள்ளார். தனது கட்சியின் ராஜ்யசபா எம்பி சுஷில் குப்தா வெளியிட்டிருந்த ஒரு பதிவுக்கு கெஜ்ரிவால் இவ்வாறு பதிலளித்திருந்தார்.

குப்தாவின் பதிவில், ‘‘டில்லியில் நூற்றுக்கணக்கான வர்த்தர்களிடம் பணியாற்றியவர்களின் எதிர்காலம் பாதித்துள்ளது. அதனால் முதல்வர் இன்றைக்கு அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதில் காங்கிரஸ் கலந்துகொண்டது. ஆனால், பாஜக கலந்துகொள்ளவில்லை. வர்த்தகர்களிடம் பாஜக என்ன எதிர்பார்க்கிறது?’’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அஜய் மெக்கன், அரவிந்தர் சிங், ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங், எம்எல்ஏ சோம்நாத் பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.