மும்பை :

டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் இந்தி, தாய் மொழியாக இருந்தாலும், ‘பாலிவுட்’ எனப்படும் இந்தி சினிமா உலகம் மும்பையை தளமாக கொண்டே செயல்படுகிறது.

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் சர்வதேச வசதிகளுடன் கூடிய சினிமா நகரை உருவாக்கப்போவதாக அந்த மாநில முதல்-அமைச்சர் யோகி ஆதித்ய நாத் அறிவித்துள்ளார். டெல்லி அருகே இந்த ‘பிலிம் சிட்டி’ அமைக்கப்படுகிறது.

சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று மும்பை வந்துள்ள யோகி ஆதித்ய நாத், பாலிவுட் பிரபலங்களை இன்று சந்தித்து பேசுகிறார்.

டெல்லி பிலிம் சிட்டிக்கு ஷுட்டிங் நடத்த வருமாறு, பாலிவுட் சினிமா உலகத்தினருக்கு, ஆதித்ய நாத் அழைப்பு விடுக்கலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில் மகாராஷ்டிர மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் சச்சின் சாவந்த் “இந்தி சினிமா உலகை மும்பையில் இருந்து வெளியே கொண்டு செல்ல பெரிய சதி நடக்கிறது” என பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று மும்பையில் பேட்டி அளித்த முதல்-அமைச்சர் உத்தவ் தாக்கரே “ஒரு துறையில் முன்னேற்றம் ஏற்படுமானால் நாம் பொறாமை கொள்ள மாட்டோம். ஆனால், இங்கிருந்து வலுக்கட்டாயமாக தொழில் வளத்தை எடுத்த செல்ல யாரும் முயன்றால் நான் அதனை அனுமதிக்க மாட்டேன்” என எச்சரித்தார்.

– பா. பாரதி