டில்லி:
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு பலத்த பாதுகாப்பில் உள்ள ஜம்மு காஷ்மீருக்கு முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி செல்கிறார். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்களும் காஷ்மீர் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே அறிவித்தப்படி இன்று காலை தனது வீட்டில் இருந்து புறப்பட்ட ராகுல்காந்தி டில்லி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து ஸ்ரீநகர் செல்லம் விமானத்தில் ஏறினார். அவருடன் பாதுகாப்பு அதிகாரிகளும் விமானத்தில் ஏறினர்.
இதுகுறித்து கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ராகுலைத் தொடர்ந்து இன்று எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒரு பகுதியினரும் இன்று ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளனர் என்று கூறினார்.
மேலும், ஜம்மு காஷ்மீரில் ஒருபுறம் நிலைமை சாதாரணமானது என்று அரசாங்கம் கூறுகிறது, மறுபுறம் அவர்கள் யாரையும் செல்ல அனுமதிக்கவில்லை. இதுபோன்ற முரண்பாடுகளைப் பார்த்ததில்லை. விஷயங்கள் சாதாரணமாக இருந்தால், அரசியல் தலைவர்கள் ஏன் வீட்டுக் காவலில் உள்ளனர்? என்று கேள்வி எழுப்பினார்.
இந்த பரபரப்பான நிலையில், ராகுல் ஸ்ரீநகருக்கு பயணமாகி உள்ளார்.
இதற்கிடையில், மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் டிவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.
அதில், “ஜம்மு காஷ்மீர் மக்களை எல்லை தாண்டிய தீவிரவாதம், தீவிரவாதிகள், பிரிவினை வாதிகள் ஆகியோரின் தாக்குதலில் இருந்து மத்திய அரசு காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மாநிலத்தில் தவறான நடவடிக்கைகள், வதந்திகளை பரப்புவது ஆகியவை கட்டுப்படுத்தப்பட்டு, படிப்படியாக இயல்பு வாழ்க்கை வந்து கொண்டிருக்கிறது.
இப்போது எதிர்க்கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள் இங்கு வந்து மக்களைச் சந்திப்பதால், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் அவர்களுக்கு தொந்தரவுகள் ஏற்படலாம் ” என வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆனால், ஜம்மு காஷ்மீர் மாநில நிர்வாகத்தின் வேண்டுகோளையும் மீறி எதிர்க்கட்சி தலைவர்கள் அங்கு இன்று செல்ல முடிவு செய்துள்ளனர்.
இதன் காரணமாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் மற்றும் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் துணை ராணுவப்படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது.
ராகுல்காந்தி மக்களை சந்திக்க அனுமதிக்கப்படுவாரா? திருப்பி அனுப்பப் படுவாரா என்பது இன்னும் சிறிது நேரத்தில் தெரிய வரும்…