மதுரை: மதுரை ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த ராகுல் காந்தி, கிராமத்துக்கு சென்று பொங்கல் விழாவில் கலந்து கொண்டு ஊர் மக்களோடு அமர்ந்து உணவு சாப்பிட்டது, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியை காண தனி விமானம் ஒன்றில் டெல்லியில் இருந்து மதுரை வந்தார் ராகுல் காந்தி. பின்னர் 45 நிமிடங்கள் ஜல்லிக்கட்டை ஆர்வமுடன் கண்டு ரசித்த அவர், பின்னர் தென் பழஞ்சி என்ற கிராமத்துக்கு சென்றார். அங்கு காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்.

அந்த கிராமத்தில் ராகுல் காந்திக்கு உணவருந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பின்னர் கிராம மக்களுடன் தாமும் அமர்ந்து மக்களோடு மக்களாக உணவருந்தினார். பந்தியில் அவரின் இடது பக்கம் சிறுமி ஒருவரும், அவரது தாயாரும் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு இலையில் சாப்பாடு பரிமாறப்படவில்லை என்பதை அறிந்து உணவு பரிமாறுமாறு அக்கறையுடன் கூறினார்.

எளிமையாக மக்களுடன் அமர்ந்து எவ்வித பந்தாவும் இல்லாமல் வெகு ஜனங்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார் ராகுல் காந்தி. அப்போது தமக்கு அருகில் உட்கார்ந்திருந்த சிறுமியிடம் பேசினார். குடும்ப விவரங்கள்,கல்வி, பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றி கேட்டு தெரிந்து கொண்டார்.

அவரின் இந்த எளிமையும், மக்களோடு மக்களாக அமர்ந்து உணவருந்திய வீடியோவும் இணையத்தில் வைரலானது. ராகுல் காந்தியுடன் அமர்ந்து உணவருந்திய அந்த சிறுமி கூறுகையில், தமது குடும்ப விவரங்களை ராகுல் காந்தி முழுமையாக கேட்டறிந்தார். தம்பிகள், தங்கைகள் என்ன படிக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள் என்று கேட்டார்.

ஒரு பெரிய தலைவருடன் பேசுகிறோம் என்னும் போது பதட்டமாக இருந்தது. ஆனால் தாம் ஒரு தலைவர் என்பதை எண்ணாமல் வெகு சகஜமாக என்னிடம் அவர் உரையாடினார். இயல்பாக பேசுமாறு என்னிடம் கூறிய அவர், நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

பெரிய தலைவர் ஒருவருடன் பேசியது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மறக்க முடியாத நிகழ்வாகவும் இருக்கிறது என்று கூறினார். அரசியல் பிரமுகர்கள் என்றால் பெரும் பகட்டுடன் இருப்பதும், போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பதிலுமே இருப்பார்கள். ஆனால் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை தென்பழஞ்சி கிராமத்தில் ராகுல் காந்தி நிரூபித்து காட்டிவிட்டார், சிறந்த தலைவரின் இலக்கணம் இதுதான் என்று இணையத்தில் மக்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.