பெங்களூரு:

பெரும்பான்மை இல்லாத நிலையில் முதல்வராக பதவி ஏற்றுள்ள எடியூரப்பா பதவி விலக கோரியும், எடியூரப்பா பதவி ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காங்கிரஸ் – ம.ஜ.தளம் எம்எல்ஏ.க்கள் சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக இன்று காலை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விதான் சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும், மதசார்பற்ற ஜனதாதளம் உறுப்பினர்களும்  தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

காங்.ஜேடிஎஸ் கூட்டணிக்கு   பெரும்பான்மைக்கு அதிகமாக 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்தும், அந்த கூட்டணியை ஆட்சி பொறுப்பு ஏற்க அழைப்பு விடுக்காமல் 104 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி அருதிப்பெரும்பான்மை பெறாத பாஜகவை ஆட்சி பொறுப்பேற்ற கவர்னர் அழைத்த்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இன்று   காலை முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவைக் கட்டிடமான விதான் சவுதா வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கூடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  காங்கிரஸ் நடத்தும் தர்ணா போராட்டத்தில் சுயேட்சை எம்எல்ஏக்கள் இருவரும் பங்கேற்றுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், மல்லிகார் ஜுன கார்கே அசோக் கெலாட் உள்ளிடோர் கலந்துகொண்டுள்ளனர்.

மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி உள்ளிட்டோர் கல்ந்துகொண்டுள்ளனர்.

இதன் காரணமாக கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் போராட்டத்தை தொடர்ந்து அந்த இடத்தில் காங்கிரஸ், மஜத கட்சிகளின் தொண்டர்களும் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது.