டில்லி

நாட்டில் பெட்ரோல் விலை உயர்ந்து வருவதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி 15 நாட்களுக்குத் தொடர் போராட்டம் நடத்த உள்ளது.

 

மத்திய அரசின் உத்தரவுப்படி எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி மாற்றி அமைக்கின்றன.   கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.   இதனால் மக்கள் கடும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

நேற்றைய நிலவரப்படி டில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.107.24 ஆகவும் டீசல் விலை ரூ.95.97 ஆகவும் உயர்ந்துள்ளது.  மும்பை நகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.113.12 மற்றும் டீசல் விலை ரூ.104 ஆக அதிகரித்தது.  இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.   எதிர்க்கட்சிகள் பலமுறை கேட்டுக் கொண்டும் மத்திய அரசு இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலர் கே சி வேணுகோபால், “நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.  இதைக் கண்டித்து நவம்பர் 14 முதல் 29 வரை காங்கிரஸ் கட்சி நாடெங்கும் தொடர் போராட்டம் நடத்த உள்ளது.  இந்த 15 நாட்கள் போராட்டத்தில் ஒரு வாரம் பாத யாத்திரை நடத்தப்பட உள்ளது,  இந்த பாதயாத்திரையை மாநில காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்பாடு செய்ய உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.