புதுடெல்லி: தொங்கு நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக வந்தாலும், ஒரு பிராந்தியக் கட்சியின் தலைவரை பிரதமர் பதவிக்கு ஆதரிக்க காங்கிரஸ் தயங்காது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் மீண்டும் தெரிவித்துள்ளார்.

“எங்களுடைய கட்சித் தலைமையே இதை தெளிவுபடுத்தியுள்ளது என்றுகூறிய அவர், நாங்கள் தனிப்பெரும் கட்சியாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தாலும், பிரதமர் பதவி எங்களுக்கு வழங்கப்படவில்லை எனில், அதை பெரிதுபடுத்த மாட்டோம்” என்றுள்ளார் குலாம்நபி ஆசாத்.

சில முரண்டு பிடிக்கும் மாநிலக் கட்சிகளை வழிக்கு கொண்டுவந்து, பாரதீய ஜனதாவின் முயற்சிகளை முறியடிக்கவே, ஆசாத் இவ்வாறு கூறுவதாக தகவல்கள் வருகின்றன.

ஆனால், ஆசாத்தின் கருத்திலிருந்து மாறுபடுகிறார் அக்கட்சியின் முதன்மை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சர்ஜிவாலா.

“நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக நாங்கள் வெற்றிபெற்றால், ஒத்த கொள்கையும், மனப்போக்கும் உடைய கட்சிகளை இணைத்துக்கொண்டு அரசு அமைக்க முயற்சி செய்வோம். பெரிய கட்சிக்கு தலையேற்கும் வாய்ப்பு கொடுக்கப்படுவதுதான் முறை” என்று தெரிவித்துள்ளார்.