டெல்லி: 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி, நாடு முழுவதும் பாத யாத்திரை (பாரத் ஜோதா யாத்ரா) நடத்த திட்டமிட்டு உள்ளார். அதற்காக அரசியல் விவகாரக் குழு, பணிக்குழு -2024 மற்றும் மத்திய திட்டமிடல் குழுவை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி அமைத்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக வரலாறு காணாத தோல்வியை சந்தித்து வருகிறது காங்கிரஸ் கட்சி. 100 ஆண்டுகளை கடந்த பாரம்பரியமான காங்கிரஸ் கட்சியில் உள்ள கோஷ்டி பூசலே, கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. இதையடுத்து, கட்சியை பலப்படுத்தும் வகையில், பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் சிந்தனை அமர்வு மாநாடு நடைபெற்றது. அதில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள திட்டங்களை வகுக்கும். அதேபோல் மக்களைத் தொடர்பு கொள்வதிலும் தனது போக்கை மேலும் வலுப்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதேபோல், நாட்டு மக்களிடம் முக்கிய பிரச்சினைகளில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை எப்படி எடுத்துச் செல்வது என்பது குறித்து கட்சித் தலைவர்களுக்கு பயிற்சியளிக்கவிருக்கிறது. இந்த பயிற்சி கேரளாவில் நடத்தப்படும். இத்தகைய பயிற்சி மையத்தை உருவாக்குவது கட்சி 2003ல் ஏற்படுத்திய ஷிம்லா ஒப்பந்தத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர கட்சியின் பொறுப்புகளில் 50% பேர் 50 வயதுக்கும் குறைவானவர்களாக இருப்பது பற்றியும் முடிவெடுக்க காங்கிரஸ் ஆயத்தமாகியுள்ளது. இது மாவட்ட அளவிலான கமிட்டிகளுக்கே பொருந்தும். மாநில காங்கிரஸ் கமிட்டி, காங்கிரஸ் செயற் குழுவுக்கு இந்த வயது வரம்பு பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்தே மக்களிடையே மீண்டும் எழுச்சியை பெறும் நோக்கில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 12 மாநிலங்களை தேர்வு செய்து அங்கு மக்கள் யாத்திரை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. சுமார் 3500 கி.மீ தூரம் இந்த யாத்திரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த யாத்திரை மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கு கிறது. இந்த யாத்திரையின் கொள்கை அரசியல் சாசன உரிமைகளையும், ஜனநாயகத்தையும் பேண, பிரிவினையை எதிர்கொள்ள ஒருமித்த சிந்தனை கொண்ட அரசியல் கட்சிகள், அமைப்பு களின் ஆதரவைத் திரட்டுவதே என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரத் ஜோதா யாத்திரை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பாத யாத்திரையானது, தேசத்தை ஒருமைப்படுத்த, நாட்டை இரு துருவகங்களாக பிரிக்க நினைப்போரிடமிருந்து காப்பாற்றும் முயற்சி என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த யாத்திரையின் போது வழியில் பல மாநிலங்களிலும் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் நடைபெற உள்ள பாரத ஜோதா யாத்திரைக்கான அதற்காக அரசியல் விவகாரக் குழு, பணிக்குழு -2024 மற்றும் மத்திய திட்டமிடல் குழுவை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி அமைத்துள்ளார்.
அதன்படி, அரசியல் விவகார குழுவுக்கு ராகுல்காந்தி உள்பட 8 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன் கார்கே, குலாம்நபி ஆசாத், அம்பிகா சோனி, திக்விஜய்சிங், ஆனந்த் சர்மா, கே.பி.வேணுகோபால், ஜிதேந்திரா சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பணிக்குழுவுக்கு, முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், அஜய் மக்கான், பிரியங்கா காந்தி, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, குனில் கனுகொலு ஆகிய 8 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மத்திய திட்டமிடல் குழுவுக்கு திக்விஜய்சிங், சச்சின் பைலட், சசி தரூர், ரவ்நீத் சிங்பினு, கே.ஜே.ஜார்ஜ், ஜோதிமணி, பிரத்யார் படோலினி, ஜினு பட்வாரி, சலீம் அகமது ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கான அறிவிப்புகளை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.