சென்னை: காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளும் சட்டசபை கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட்டை வாசிக்கும் முன்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் பேசுவதற்கு அனுமதி கேட்கப்பட்டது. சபாநாயகர் அனுமதி மறுக்கவே திமுகவினர் பட்ஜெட் உரையை வாசிக்க விடாமல் கடும் அமளியில் ஈடுபட்டதோடு பின்னர் அவையில் இருந்தும் வெளிநடப்பு செய்தனர்.
இது குறித்து பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரை முழுமையாக புறக்கணிக்க திமுக முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இதனிடையே, காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இது குறித்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் பேட்டி கூறியதாவது: தற்போது பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது. மாநில அரசு கலால் வரியை ரத்து செய்ய வேண்டும். நிதிநிலை அறிக்கையை கவர்ச்சிகரமாக அறிவிப்பார்கள். ஆனால் அதை செயல்படுத்த மாட்டார்கள் என்று கூறினார்.