சென்னை: காங்கிரஸ் கட்சியில் பூத் கமிட்டி வைக்கக் கூட ஆள் கிடையாது என திமுக பிரமுகர் தளபதி விமர்சனம் செய்தது கூட்டணியில் சலசலப்பு ஏற்படுத்தி உள்ள நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்து உள்ளனர். காங்கிரஸ் கட்சியை அவமதிக்கும் தளபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

திமுக சார்பில் மொழி போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதன்படி, மதுரையில் நடந்த மொழி போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் திமுக மாநகர செயலாளர் கோ.தளபதி பேசுகையில், காங்கிரஸ் கட்சிக்கு 3000, 4000 வாக்குகள் மட்டுமே இருக்கிறது, ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோருக்கு சீட் கொடுக்கக் கூடாது. இருவரும் எப்படியோ எம்பியாகிவிட்டனர். ஆனால் மற்றவர்கள் எம்எல்ஏக்கள் ஆக வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் யார் எப்படி போனால் என்ன என்று தற்போது அதுல பங்கு வேணும், இதுல பங்கு வேண்டும் என கேட்கிறார்கள்.
திமுக இல்லையென்றால் இந்தியா கூட்டணியே கிடையாது. முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர்தான் இந்த இந்தியா கூட்டணியை காப்பாற்றி வருகிறார்கள் என்றவர், காங்கிரஸ் கமிட்டிக்கு பூத் கமிட்டி வைக்கக் கூட ஆள் கிடையாது. இப்படிப்பட்ட சூழலில் அவர்கள் பேசுவது வேதனையாக இருக்கிறது என தெரிவித்திருந்தார்.
திமுக எம்.பி.யின் இந்த பேச்சு கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே பிரவீன் தாக்கூர், மாணிக்கம் தாக்கூர் போன்றவர்கள் கூட்டணி குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையான நிலையில், தற்போது திமுக எம்.பி.யின் பேச்சும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக எம்.பி. தளபதியின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியை அவமதிக்க வேண்டிய அவசியம் என்ன என்று திமுக நிர்வாகி தளபதிக்கு, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செல்வபெருந்தகை தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகி கள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் பேரியக்கத்தை அவமதிக்கும் வகையில் திமுக மாநகர செயலாளர் கோ.தளபதி அவர்கள் பேசியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
மொழி, சமூக நீதி, ஜனநாயக உரிமைகளுக்காக உயிர்நீத்த தியாகிகளின் நினைவை போற்ற வேண்டிய மேடையில், கூட்டணி கட்சியை இழிவுபடுத்தும் வகையில் பேசிய கோ.தளபதி அவர்களின் பேச்சு தேவையற்றதும், கண்டிக்கத்தக்கதுமானதும் ஆகும். காங்கிரஸ் பேரியக்கம் இன்று தமிழ்நாடு முழுவதும் வலுவான அமைப்புடன் செயல்பட்டு வருகிறது. 100% பூத் கமிட்டி அமைக்கும் பணி நிறைவு பெறும் தருவாயில் உள்ளது;
85% கிராம கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அமைப்பு சீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் கிராம சபை தொடர்பான பணிகள் மூலம், மக்களின் உரிமை, மரியாதை, வாழ்வாதாரம் குறித்த போராட்டத்தை காங்கிரஸ் பேரியக்கம் நேரடியாக மக்களிடையே கொண்டு சென்று வருகிறது.
கூட்டணி அரசியலின் மாண்பை மிதித்து, பொது மேடையில் காங்கிரஸ் பேரியக்கத்தையும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இழிவுபடுத்திப் பேசிய திமுக மாநகர செயலாளர் கோ.தளபதி அவர்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திமுக எம்.பி.யின் கருத்துக்கு காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]