தராபாத்

காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் தனது தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி தெலங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றார். உடனடியாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட 6 முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து அதற்கான கோப்புகளில் ரேவந்த் ரெட்டி கையெழுத்திட்டார்.

டிசம்பர் 9-ந்தேதி அரசு பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயணத் திட்டத்தை ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தார். பிறகு ஏழைகளுக்கு ரூ.10 லட்சம் வரையில் காப்பீடு வழங்கும் ராஜீவ் ஆரோக்கிய ஸ்ரீ சுகாதாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதற்கான லோகோ மற்றும் சுவரொட்டியை வெளியிட்டார்.

நேற்று தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற மேலும் 2 திட்டங்களை ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்துள்ளார். அதாவது ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் மற்றும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் ஆகிய 2 திட்டங்களை ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்துள்ளார்.

தெலுங்கானா மாநில தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் ஆகியோர் இந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தனர்.