புனே
காங்கிரஸ் இல்லாத இந்தியா என மோடி கூறுவது அரசியலுக்காக என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்
சென்ற பிப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி, “சுதந்திரத்துக்குப் பின் காங்கிரஸ் இல்லாத இந்தியா தேவை என காந்தி கூறினார். அவருடைய கனவை நிறைவேற்ற காந்தி குடும்பத்தினர் தற்போது உதவி வருகின்றனர்” என தெரிவித்தார். இது அரசியல் களத்தில் சர்ச்சையே ஏற்படுத்தியது. இது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
புனே நகரில் நேற்று தியானேஸ்வர் முலாய் என்னும் அரசு அதிகாரி எழுதிய ஆறு புத்தகங்கள் வெளியீட்டு விழா நிகழ்ந்தது. தியானேஸ்வர் தற்போது வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் காரியதரிசியாக உள்ளார். அந்த விழாவில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.
அவர் தனது உரையில், “தற்போது ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என சிலர் கூறி வருவது அரசியலுக்காகத் தான். அது வெறும் அரசியல் கோஷம் மட்டுமே அது ஆர் எஸ் எஸ் சொன்னது அல்ல. ஆர் எஸ் எஸ் இயக்கத்தைப் பொருத்தவரை ‘இல்லாத’ என்பது தவிர்க்க வேண்டிய சொல்.
எங்கள் இயக்கத்தை பொருத்தவரை யாரும் இல்லாமல் போவதை நாங்கள் விரும்பவில்லை. அனைவரும் சேர்ந்து இந்த நாட்டை முன்னேற்ற வேண்டும். அனைவரும் என்பது எங்கள் எதிரிகளையும் குறிக்கும்.
எப்போதும் நேர் மறையான வார்த்தைகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும். ’இல்லாத’ என்பது எதிர்மறையான வார்த்தை. அதை உபயோகப் படுத்துவோர் நாட்டின் முன்னேற்றத்தை விரும்பாதவர்கள் ஆவார்கள்” என கூறி உள்ளார்.