டில்லி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை பதவி நீக்கம் செய்யவில்லை என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக இருந்த  அமரீந்தர் சிங் குக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர்  நவஜோத் சிங் சித்துவுக்கும் இடையில் உள்ள பனிப்போரில் பதவி விலகினார்.   இதையொட்டி அம்மாநிலத்தில் புதிய முதல்வர் நியமிக்கப்பட்டார்.  தம்மைப் பதவியில் இருந்து விலக்கி தம்மை அவமானம் செய்து விட்டதாக அமரீந்தர்  சிங் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்திப் சிங் சுர்ஜிவாலா, “அமரீந்தர் சிங் தம்மை காங்கிரஸ் தலைமை பதவி விலக்கி அவமானப்படுத்தியதாகக் குற்றம் சாட்டுகிறார்.  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவரை பதவி நீக்கம் செய்யவில்லை.  மொத்தமுள்ள 79 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 78 பேர் அவர் மீது நம்பிக்கை இழந்துள்ளனர்.

அதன் பிறகு அவர் எப்படி பதவியில் இருக்க முடியும்,  அவரை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என 78 உறுப்பினர்கள் தலைமைக்கு கோரிக்கை விடுத்தனர்.  சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கைகளைக் கேட்காமல் இருக்க முடியுமா?   அது மட்டுமின்றி தற்போது பஞ்சாபில் முதல் முதலாக ஒரு பட்டியலினத்தவர் முதல்வராகி உள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.