சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை நாடு முழுவதும் தீயாக பரவியுள்ளது என்று தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மோடி அரசை வீட்டுக்கு அனுப்பும் வகையில் தேர்தல் பிரசாரங்களை காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் முடுக்கி விட்டுள்ளன.
தேர்தல் தொடர்பாக கடந்த 2ந்தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் அறிக்கை வெளியிட்டார். அதில் மக்கள் நலனுக்கான பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இது மக்களிடைடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியின்போது பேசிய ப.சிதம்பரம் ”வேலைவாய்ப்பின்மை, விவசாயம், தலித் மக்களின் பிரச்சனை, சிறுபான்மையினர் பிரச்சனையில் நாங்கள் அதிக கவனம் செலுத்து இருப்பதாகவும், முக்கியமாக விவசாயிகளின் கடன் குறித்து தேர்தல் அறிக்கை முக்கிய ஒன்றாக இருக்கும். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யும்’ என்று கூறியிருந்தார்.
அதன்படி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில்,
நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் (MNREGA) 150 நாட்களாக அதிகரிக்கப்படும்.
ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72,000 ரூபாய், 5 ஆண்டுக்கு 3,60,000 ரூபாய் வழங்கப்படும்.
மத்திய அரசிலுள்ள 22 லட்ச காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.
விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் போடப்படும்.
தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
2030-க்குள் நாட்டில் இருந்து வறுமை முழுமையாக நீக்கப்படும்
தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
இளைஞர்கள் தொழில் தொடங்கும் போது 3 ஆண்டுகளுக்கு லைசென்ஸ் பெற தேவையில்லை – காங். தேர்தல் அறிக்கை என பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இதுகுறித்து பேசிய ப.சிதம்பரம், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாடு முழுவதும் மக்களிடையே தீயாக பரவி வருவதாக கூறியவர், பெட்ரோல், டீசல் எங்களின் உண்மையான ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவரப்படும் என்றும் பெருமிதமாக கூறினார்.