டெல்லி: பீகார் சட்டமன்ற தேர்தல் குறித்து காங்கிரஸ் தேர்தல் குழு இன்று டெல்லியில் ஆலோசனை நடத்துகிறது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர். அதுபோல பாட்னாவில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டமும் நடைபெற உள்ளது.

243 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட பீகார்  மாநிலத்தின் தற்போதைய சட்டப்பேரவை ஆயுட்காலம் நவம்பர் 22 ஆம் தேதியுடன்  நிறைவடைகிறது.  இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதன்படி, நவ.6 மற்றும் நவ.11 ஆகிய தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறும் என்றும், நவ.14ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும் என்றும்  தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பீகார் மாநிலத்தில்,  ஏற்கனவே பீகார் தீவிர வாக்காளர் சீர்திருத்தம் புயலை கிளப்பிய நிலையில், இந்த தேர்தலில் முதன்முதலாக பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும்  களமிறங்கியுள்ளது. இதனால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில்,  காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு டெல்லியில் இன்று கூடுகிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் வாக்காளர் திருத்த பட்டியல், தேர்தல் பணி, கள நிலவரம், தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள்  மற்றும் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.