அஜ்மீர்
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 15 சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியும் அது குறித்து காங்கிரஸ் பெருமை அடித்துக் கொள்ளவில்லை என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெகலாத் கூறி உள்ளார்.
உலகப் புகழ்பெற்ற சுஃபி சன்னியாசி குவாஜா மொய்னுதின் சிஸ்தி அடக்கம் செய்யப்பட்ட தர்கா ராஜஸ்தான் அஜ்மீர் நகரில் அமைந்துள்ளது. நேற்று இந்த தர்காவுக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெகலாத் வந்திருந்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சார்பில் அவர் சமாதி மீது சால்வையை போர்த்தினார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அசோக் கெகலாத், “இந்தியாவுக்கு ஜவகர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி பெருமளவில் சேவைகள் செய்துள்ளனர். ஆனல் மோடி அரசு அவர்களை பற்றி ஏதும் சொல்லாமல் அவர்கள் புகழை குலைக்கும் வகையில் பேசி வருகிறது. மோடி பிரதமரான பிறகு தான் செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது போல் பாஜக்வினர் பேசுகின்றனர்.
இந்திரா காந்தி காலத்தில் இஸ்ரோ தொடங்கப்பட்டு காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே நூற்றுக்கணக்கான செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால் அது குறித்து காங்கிரஸ் அரசு எப்போதும் பெருமையாக தகவல்கள் வெளியிட்டது கிடையாது.
நமது நாட்டு மக்கள் அப்பாவிகள். அதனால் மோடி மட்டுமே சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தி தீவிரவாதிகளை அழித்ததாக நினைக்கின்றனர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 15 சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தப்பட்டன. ஆனால் அது குறித்து காங்கிரஸ் வாயை கூட திறந்ததில்லை. பாஜக போல் பெருமை அடித்துக் கொள்வதை காங்கிரஸ் விரும்பியதில்லை.
இந்திரா காந்தி வங்க தேசம் உருவாக காரணமானவர் என்பதையோ காலிஸ்தான் இயக்கத்தை அழித்தவர் என்பதையோ மோடி சொல்வதே கிடையாது. ஜவகர்லால் நேரு சுதந்திரத்துக்காக 12 வருடங்கள் சிறை வாசம் செய்தார். இதைப் பற்றியும் பாஜகவினர் சொல்வதில்லை. மாறாக ஆர் எஸ் எஸ் உடன் சேர்ந்துக் கொண்டு காங்கிரஸ் புகழை குறைக்கும் வகையில் பேசி வருகின்றனர்.” என தெரிவித்துள்ளார்.