டில்லி

த்திய ரெயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல்  நடத்தி வரும் நிறுவனம் வங்கிக் கடனை திருப்பி தராததாக எழுந்த புகாரை ஒட்டி அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் கூறி உள்ளது.

மத்திய ரெயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயலைப் பற்றி ஆங்கில செய்தி ஊடகமான தி ஒயர் செய்தி ஒன்றை வெளியிட்டது.  அதில் ”ஷிர்டி இன்டஸ்டிரிஸ் என்னும் நிறுவனத்தில் ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த 2010 ஆம் ஆண்டு வரை தலைவராகவும் முழு நேர இயக்குனர் ஆகவும் இருந்துள்ளார். அந்த நிறுவனத்துக்கு யூனியன் வங்கியின் தலையில் கீழுள்ள வங்கிக் குழு ரூ.650 கோடி கடன் அளித்துள்ளது.  இந்தக் கடனில் சுமார் 65% திருப்பித் தராமல் நிலுவையில் இருந்துள்ளது.   அதனால் கடந்த 2017ஆம் வருடம் இந்த தொகையை வங்கி நிர்வாகம் வாராக்கடன் என அறிவித்துள்ளது”  என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த செய்தியை ஒட்டி பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி பியூஷ் கோயலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. “ஷிர்டி இண்டஸ்டிரிஸ் நிறுவனம் கடந்த 2015ஆம் வருடம் ஜூன் 8 அன்று நலிவுற்ற நிறுவனம் என அறிவிக்கப்பட்டது.   அதனால் அந்த நிறுவன இயக்குனர்கள் கடனை திருப்பிச் செலுத்த இயலாத நிலையில் உள்ளதாக கூறி உள்ளனர்.

அதே நேரத்தில் இந்த நிறுவனத்தின் சார்பு நிறுவனமான ஆசிஸ் இண்டஸ்டிரீஸுக்கு ரூ.1.59 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.   இந்த ஆசிஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் இயக்குனரான சீமா கோயல்,  அமைச்சரின் மனைவி ஆவார்.   மேலும் அமைச்சரும் இந்த நிறுவனத்தில் 2005 முதல் 2013 வரை இயக்குனராக பதவி வகித்துள்ளார்.   அதனால் உடனடியாக பியூஷ் கோயலை பதவி நீக்கம் செய்ய வேண்டும்”  என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

இதை ரெயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மறுத்துள்ளார்.  அவர், “கடந்த 2010ஆம் வருடம் ஜூலை 1ஆம் தேதியில் இருந்து நான் அந்த ஷிர்டி இண்டஸ்டிரிஸ் நிறுவனத்தில் இருந்து முழுமையாக விலகி விட்டேன்.   எனக்கும் அந்த நிறுவனத்துக்கும் அதன் பிறகு எந்த தொடர்பும் கிடையாது.    கடந்த 2013ஆம் வருடம் கடன் வழங்குவதாக கூறப்படும் காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருந்துள்ளது   மேலும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வாராக்கடனாக மாற்றப்பட்ட போது காங்கிரஸ் ஆட்சிதான் நடந்து வந்தது.   மேலும் ஷிர்டி இண்டஸ்ட்ரிஸ் நலிவுற்ற நிறுவனம் என அறிவித்தது காங்கிரஸ் தலைமையிலான அரசு தான்”  என பதில் அளித்துள்ளார்.