பிஜேபி மற்றும் பிஜேபியின் நன்கொடையாளர்களுக்கு இடையேயான தொடர்பு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் கட்சி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :
தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக-வுக்கு வந்த நிதிக்கும் நிதியளித்த நிறுவனங்கள் மீது மத்திய அரசு அமைப்புகள் நடத்திய சோதனைக்கும் தொடர்பு இருப்பதாக பல்வேறு செய்தி நிறுவனங்கள் ஆதாரத்துடன் குற்றம்சாட்டி வருகின்றன.
IT, ED, CBI உள்ளிட்ட இந்த தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளை பாஜக தனது ஏவல் துறையாக மாற்றியுள்ளது என்பது நாட்டில் உள்ள அனைவரும் அறிந்த ஒன்றாக உள்ளது.
2014க்கு பிறகு அமலாக்கத்துறை மூலம் அரசியல்வாதிகளுக்கு எதிராக போடப்பட்ட வழக்குகள் 4 மடங்கு அதிகரித்துள்ளது, அதில் 95% எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது பதியப்பட்டுள்ளது.
2018-19 மற்றும் 2022-23 ஆகிய நிதியாண்டில்மட்டும் மொத்தம் 30 நிறுவனங்களிடம் இருந்து ரூ. 335 கோடி பாஜகவுக்கு நன்கொடையாக வந்துள்ளது அதே காலகட்டத்தில் இந்த நிறுவனங்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்புகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்த செய்தி நிறுவனங்கள் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியுள்ளன.
இதில், ரூ. 187.58 கோடி வழங்கிய 23 நிறுவனங்கள் 2014 முதல் ரெய்டு நடந்த ஆண்டு வரை பாஜகவுக்கு நன்கொடையும் வழங்கவில்லை.
புலனாய்வு அமைப்புகள் மூலம் அழுத்தம் கொடுத்து ஆளும் கட்சிக்கு நன்கொடை என்ற பெயரில் சட்டப்பூர்வமாக மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டது தெளிவாக தெரிகிறது.
புலனாய்வு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தி கார்ப்பரேட்டுகளிடம் நன்கொடை பெறவில்லை என்றால் பாஜக-வின் நிதி ஆதாரங்கள் குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா ? என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.