ஜபல்பூர்
ஜபல்பூரில் போலி ரெம்டெசிவிர் மருந்து விற்றதாக வழக்குப் பதியப்பட்டுள்ள விஸ்வ இந்து பரிஷத் தலைவர் மீது காங்கிரஸ் சிபிஐ விசாரணை கோரி உள்ளது.

இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாக இந்தியா கடும் பாதிப்பு அடைந்து வருகிறது. சில நாட்களாக இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது. கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ஆக்சிஜன், மருந்துகள் உள்ளிட்ட பவல்ற்றுக்கும் தேவை அதிகரித்துள்ளது.
கொரோனாவை குணப்படுத்தும் மருந்துகளில் ஒன்றான ரெம்டெசிவிர் ஊசி மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த மருந்து அதிக விலைக்கு விற்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் போலி ரெ3ம்டெசிவிர் மருந்தை அதிக விலைக்கு விற்கும் அநியாயமும் அரங்கேறி வருகிறது. காவல்துறையினர் இதைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
ஜபல்பூரில் வசிக்கும் சரப்ஜீத் சிங் மோகா என்பவர் இந்நகர விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவராக உள்ளார். இவர் சிடி ஹாஸ்பிடல் என்னும் மருத்துவமனையை நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனையில் தேவேந்திர சவுரஸ்லா என்பவர் மேலாளராகப் பணி புரிந்து வருகிறார். இவர்களின் நண்பரான ஸ்வப்ன ஜெயின் என்பவர் மருந்துகள் விற்பனை செய்பவர் ஆவார்.
இவர்கள் மூவரும் இணைந்து போலி ரெம்டெசிவிர் மருந்தை உயிருக்கு போராடும் நோயாளிகளிடம் ரூ.35000 முதல் ரூ.45000 வரை விலை வைத்து விற்றுள்ளனர். சுமார் 1 லட்சம் மருந்துகளை இவ்வாறு விற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் இந்தூரில் இருந்து ரூ.500க்கு இந்த போலி ரெம்டெசிவிர் மருந்தை விலைக்கு வாங்கி தங்கள் சிடி ஹாஸ்பிடல் நோயாளிகளுக்கு விற்றுள்ளனர்.
இதில் சரப்ஜித் சிங் மோகா என்பவர் அரசின் உச்ச அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது. தற்போது இவர்கள் மூவர் மீதும் ஜபல்பூர் காவல்துறை நான்கு பிரிவின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் அதன் மூலம் நாட்டில் உள்ள மிகப் பெரிய குழுவைப் பிடிக்கலாம் எனவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]