புதுடெல்லி: 

த்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், புதிய மசோதாவை தயாரிக்கும் பணியில், காங்கிரஸ் மேலிடம் இறங்கியுள்ளது.


வேளாண் துறையில், சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில், விளைபொருள் உற்பத்தி, மற்றும் விற்பனை தொடர்பாக, மத்திய அரசு, மூன்று புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளது.இவற்றுக்கு எதிராக, அதிகளவில் விவசாய நிலங்களை வைத்துள்ள பஞ்சாப், ஹரியானா போன்ற வட மாநிலங்களில், போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில், காங்., தலைவர் சோனியா, விவசாயம் மாநில பட்டியலில் உள்ளதை சுட்டிக்காட்டி, மத்திய அரசின் புதிய சட்டங்களுக்கு எதிராக, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், புதிய சட்டம் கொண்டு வரவேண்டுமென ஏற்கனவே கூறியிருந்தார்.இதையடுத்து, காங்., மேலிடம், தங்கள் கட்சி ஆளும் மாநில சட்டசபைகளில் கொண்டு வருவதற்காக, மசோதா ஒன்றை தயார் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இதற்காக, கட்சியின் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான அபிஷேக் சிங்வியின் தலைமையில், ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய சட்டங்களில் இல்லாத, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் மற்றும் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் சிலவற்றை உள்ளடக்கியதாக, இந்த மசோதா இருக்கும் என தெரிகிறது.மசோதா தயாரானதும், ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின், அந்தந்த மாநில அரசுகளின் கள நிலவரங்களுக்கு ஏற்ப, அதற்கு இறுதி வடிவம் தரப்படும். இதற்கிடையே, சத்தீஸ்கர், பஞ்சாப் அரசுகள், தங்கள் கட்சியின் மசோதாவை நிறைவேற்றுவதோடு, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு, தடை போட முடியுமா என்பது குறித்த ஆலோசனையிலும், தீவிரமாக இறங்கியுள்ளன.