டில்லி
மத்திய அரசு டில்லியில் ஜி 20 மாநாட்டை நடத்தி, மணிப்பூரில் ஊரடங்கை அமல்படுத்துவதாகக் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
கடந்த மே மாதம் 3 ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தில், மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியினருக்கும் இடையே கலவரம் வெடித்து 160-க்கு மேற்பட்டோர் பலியானார்கள். இதைத் தொடர்ந்து, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி பெரும்பாலானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கலவரம் வெடித்து 4 மாதங்களை கடந்த நிலையில், வீடுகளை விட்டு வெளியேறியவர்கள், தங்கள் வீடுகளுக்குத் திரும்புமாறு மணிப்பூர் ஒருமைப்பாட்டுக்கான ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் சிலர் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்தும் தங்களை ராணுவம் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஒருங்கிணைப்புக் குழு தலைவர்கள் ராணுவமோ, காவல்துறையோ தடுத்தால் கூட வீடுகளுக்குச் செல்வோம் என்று ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் அறிவித்துள்ளனர். இதனால், மணிப்பூரில் மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது. எனவே வீடுகளுக்குத் திரும்பும் முடிவைக் கைவிடுமாறு மணிப்பூர் மாநில செய்தித்துறை அமைச்சர் சபம் ரஞ்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பதற்றம் காரணமாக, பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கை மாநில அரசு அமல்படுத்தி உள்ளது. இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, பிஷ்ணுபூர், கக்சிங், தவுபால் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மற்ற 11 மாவட்டங்களில், பகல் நேரத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
மணிப்பூர் பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ‘டிவிட்டர்’ பக்கத்தில்,
“டில்லியில் ஜி-20 மாநாடு நடக்கப் போகிறது. மணிப்பூரில் பள்ளத்தாக்கில் உள்ள 5 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு 4 மாதங்களுக்கு பிறகும் வன்முறை நீடிக்கிறது., மோடியின் இரட்டை என்ஜின் அரசுக்கோ, அங்கு நிலைமை சீராக இருக்கிறது.”
என்று பதிவிட்டுள்ளார்.