டில்லி

பாஜக வெளியிட்டுள்ள வீடியோவில் இந்தியப் பகுதிகள் பாகிஸ்தான் மற்றும் சீனாவில் உள்ளதாகச் சித்தரித்ததற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாஜக ஒரு அனிமேஷன் வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டது.  அந்த வீடியோவில் பிரதமர் மோடி உலகத்தைப் பார்ப்பது போல அனிமேஷன் காட்சி சித்தரிக்கப்பட்டிருந்தது.   அதில் இந்தியப்பகுதிகளைச் சீனா மற்றும் பாகிஸ்தான் பகுதிகளாக சித்தரிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் வீடியோ நீக்கப்பட்டது.

நேற்று காங்கிரஸ் கட்சியின் செஉதி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேட் செய்தியாளர்களிடம்,

”டிவிட்டரில் பிரதமர் மோடி, உலகத்தைப் பார்ப்பதுபோல் ஒரு அனிமேஷன் வீடியோவை பாஜகவும், அதன் தலைவர்களும் பகிர்ந்துள்ளனர். வீடியோவில் இடம் பெற்றுள்ள இந்திய வரைபடத்தில் சில இந்தியப் பகுதிகளைப் பாகிஸ்தான் மற்றும் சீனாவில் இருப்பதுபோல்  சித்தரிக்கப்பட்டுள்ளது. இதை  இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு மீதான தாக்குதல் எனக் கொள்ளலாம் .

இதைப் பொதுமக்கள் சுட்டிக்காட்டியவுடன், பாஜக தலைவர்கள் அந்த வீடியோவை நீக்கி விட்டனர். பாஜக இந்திய வரைபடத்தைத் தவறாகச் சித்தரித்தால் ரூ.100 கோடி அபராதம், 7 ஆண்டு சிறைத்தண்டனை என்று மசோதா கொண்டு வந்தது.  ஆகவே, இத்தவற்றுக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடியும், பாஜக தலைவர் நட்டாவும் நாட்டு மக்களிடம் மன்னிப்புே கேட்க வேண்டும்”.

எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.