டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேர்தல் செயலாளர் மதுசூதன் மிஸ்திரி வெளியிட்டுள்ளார். அதன்படி, தலைவர் பதவிக்கான வேட்புமனுத்தாக்கல் 24ந்தேதி தொடங்குகிறது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு கடைசியாக கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடந்தது. இதில் கட்சி தலைவரானக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, கடந்த 2017ம் ஆண்டு ராகுலை கட்சி தலைவராக நியமனம் செய்தார். அவர் சுமார் 2 ஆண்டுகள் மட்டுமே தலைவராக இருந்து வந்த நிலையில், மாநில சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடர் தோல்விகளை சந்தித்தது. மேலும் 2019ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பெருந்தோல்வியை அடைந்த நிலையில், அதற்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து சோனியா மீண்டும் இடைக்கால தலைவராக பொறுப்பேற்று கட்சியை வழிநடத்தி வருகிறார். இதற்கிடையில் ராகுலை மீண்டும் அவரை தலைவராக முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அதே வேளையில் மூத்த தலைவர்கள் சிலர் தனி கோஷ்டி அமைத்து, தலைவர் தேர்லை நடத்த வேண்டும் என போர்க்கொடி தூக்கினார். மற்றொரு தரப்பு ராகுலை கட்சி தலைவராக முயற்சித்து வருகிறது. ஆனால், ராகுல் தலைவர் பதவி ஏற்க மறுத்து வருகிறார். தற்போது காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக, ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், ராஜஸ்தானில் நடைபெற்ற சிந்தனை அமர்வு மாநாட்டில் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் தலைவர் தேர்தலுக்கான தேதி முடிவு செய்யப்பட்டு அக்டோபரில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்றும், தேர்தல் நடத்தும் அதிகாரி தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், அகில தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி, வேட்புமனுத்தாக்கல் விவரங்களை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேர்தல் செயலாளர் மதுசூதன் மிஸ்திரி வெளியிட்டுள்ளார். அதன்படி,
வேட்பு மனுத்தாக்கல் செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. (மனுத்தாக்கல் நேரம் காலை 11மணி முதல் பிற்பகல் 3மணி வரை)
வேட்பு மனுக்கள் பரிசீலனை அக்டோபர் 1-ம் தேதி
மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் அக்டோபர் 8-ம் தேதி
ஒருவருக்கு மேல் தலைவர் போட்டியிட்டால் அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெறும்.
வாக்குப்பதிவு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19-ம் தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். என்றும் அக்.19-ல் காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தலைவர் பதவிக்கான தேர்தலில், மூத்த தலைவர்கள் சசிதரூர், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மற்றொரு தரப்பு ராகுல்காந்தி அல்லது பிரியங்காவை தலைவர் பதவியில் அமர வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய அகில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் 10 மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், கட்சி தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி வரவேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிவித்து உள்ளார்.