சென்னை
தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி மேகதாது அணை விவகாரத்தில் தீர்வு காண வேண்டும் எனக் கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட மும்முரமாக ஏற்பாடு செய்து வருகிறது. இதனால் தமிழகத்துக்கு வரும் நீராதாரம் பாதிக்கப்படும் என்பதால் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பலமுறை தமிழக முதல்வர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தும் கர்நாடக பாஜக அரசு அணை கட்டுவதில் மும்முரமாக உள்ளது.
நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி இது குறித்து செய்தியாளர்களிடம்,
“காவிரியின் குறுக்கே தமிழக எல்லையில் இருந்து4 கி.மீ. தொலைவில், மேகதாது அணையைக் கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் வருவது இந்த அணையால் தடைபட்டு, டெல்டா பகுதிகள் பாலைவனமாக மாறும்.
கர்நாடகா அரசு அணை கட்டுவது தொடர்பான வரைவு அறிக்கையை அளித்தபோது, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் கருத்துகளைக் கேட்டாமல், மத்திய நீர்வள அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு இந்த விவகாரத்தில் தமிழகத்துக்கு மாபெரும் துரோகம் இழைத்திருக்கிறது.
காவிரி ஆறு கர்நாடகாவில் 320 கி.மீ. தூரம் பாய்கிறது.,தமிழகத்தில் 416 கி.மீ. தூரம் பாய்கிறது. ஆகவே, தமிழகத்துக்குத்தான் உரிமை அதிகம். எனவே இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு சுமுக தீர்வு காணாவிட்டால், அடுத்த 15 நாட்களில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்”
என எச்சரித்துள்ளார்.