டெல்லி: நீட் முறைகேடு, புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விவாதிக்க வலியுறுத்திகாங்கிரஸ் கட்சி சார்பில்  ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டிஸ் வழங்கப்பட்டு உள்ளது.

18வது மக்களவைக்கான  தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 294 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார். காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சி 233 இடங்களை பிடித்து வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. மக்களவை தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக நாடாளுமன்ற மக்களவை கடந்த (ஜுன்) மாதம்  24ம் தேதி கூடியது. இதில் முதல் 2 நாட்களும் பிரதமர் மோடி உள்பட புதிய எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து பாஜக எம்பி ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராக தொடர்ந்து 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, ஜூன் 28ம் தேதி (வெள்ளிக்கிழமை)  நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில்,  குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சிறப்புரையாற்றினார்.  இதையடுத்து நடைபெற்ற அமர்வுகள், காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்தி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து , 2 நாட்கள் விடுமுறைக்கு பின்பு நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடி உள்ளது.

கூட்டம் தொடங்கியதும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தாக்கல் செய்து குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தை தொடங்கி வைத்தார்.

முன்னதாக, நீட்  முறைகேடு  மற்றும் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விவாதிக்க  கோரி காங்கிரஸ் எம்பிக்கள் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளனர். காங்கிரஸ் எம்பிக்கள் கேசி வேணுகோபால் மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோர் மக்களவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு நீட் மற்றும் யுஜிசி நெட் தேர்வுகளிக் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து இன்று விவாதிக்க வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

அதேபோல், நாடு முழுவதும் இன்றுமுதல் அமலாகியுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார்.  மேலும், எதிர்க்கட்சிகள்  பல்வேறு விஷயங்களை முன்வைத்து ஆளும் கூட்டணி அரசுக்கு நெருக்கடி கொடுக்க  திட்டமிட்டுள்ளனர்.  இதுதவிர அக்னி பாத் திட்டம், விலைவாசி உயர்வு, தொடர் ரயில் விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை நாடாளுமன்றத்தில் எழுப்பி அமளியில் ஈடுபடவும் எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

கடந்த வாரம் முழுவதும் குடியரசுத் தலைவர் உரையின் மீதான விவாதத்தை ஒத்திவைத்துவிட்டு நீட் முறைகேடு குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், இன்றும் விவாதிக்க அவைத் தலைவர் அனுமதிக்காத பட்சத்தில் அமளி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஆனால்,  நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது