திருவனந்தபுரம்:
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நவராத்திரி திருவிழா காலங்களில் நடைபெறும் சாமி ஊர்வலங்களுக்கு போதுமான ஒத்துழைப்பு நல்காமல் அவமதிப்பதாக ஆளும் கேரள கம்யூனிஸ்ட் அரசுமீது காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
திருவனந்தபுரத்தில் நவராத்திரி திருவிழாவுக்கென்று பத்மநாபபுரம் தேவாரட்டு சரஸ்வதி தேவி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன், வேளிமலை குமாரசாமி விக்ரகங்கள் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்
அங்கு சரஸ்வதி தேவியை திருவனந்தபுரம் கோட்டையிலும், நவராத்திரி மண்டபத்திலும், குமரசாமியை ஆரியசாலை கோயிலிலும், முன்னுத்தி நங்கையம்மன் விக்ரகத்தை செந்திட்டை பகவதியம்மன் கோயிலிலும் வைத்து 9 நாட்கள் பூஜைகள் நடத்தப்பின் இந்த விக்ரகங்கள் மீண்டும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு அந்தந்த கோவில்களில் வைக்கப்படும்.
இந்த ஊர்வலத்தில் தமிழக போலீசாரும் கேரள போலீசாரும் இணைந்து சாமிக்கு மரியாதை செய்வது வழக்கம். ஆனால் இந்த ஊர்வலத்துக்கு வழக்கமாக கேரள அரசின் சார்பில் வழங்கப்படும் மரியாதையை தற்போது கேரளத்தை ஆளும் கம்யூனிச அரசு வழங்கவில்லை என கேரளாவின் முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் குற்றம்சாட்டியுள்ளன.
இது பாரம்பரியத்தை மீறும் செயல் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ரமேஷ் சென்னிதாலாவும், பாஜக கட்சியின் தலைவர் கும்மணம் ராஜசேகரும் அரசை விமர்ச்சித்துள்ளனர்