சென்னை: காங்கிரஸ் தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வர ஆசைப்படக் கூடாதா?’ என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார். சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் ஏன் ஆட்சிக்கு வர முடியாது என்றார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றதும் தொண்டர்களிடையே பேசிய செல்வபெருந்தகை, தமிழ்நாட்டில், “என்றைக்காவது பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி வரவேண்டும் என்று எங்களுக்கு கனவு உண்டு. அதற்கு எல்லோரும் சேர்ந்து அஸ்திவாரம் போடுவோம். இன்று இல்லை என்றாலும், ஒருநாள் அது நடந்தே தீரும். அதில் மாற்றுக்கருத்து கிடையாது. அதற்கான திட்டங்களை நாம் முன்னெடுப்போம். காமராஜர் ஆட்சி அமைப்போம்” என தெரிவித்தார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் கூட்டத்திலும், தமிழ்நாட்டில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைப்போம் என்று கூறி வருகிறார். இதற்கு காங்கிரசார் மத்தியில் வரவேற்பு இருந்தாலும், கூட்டணி கட்சிகள் கலாய்த்து வருகின்றன. இவை எல்லாவற்றுக்கும் மேலேஇ காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனோ, தற்போது ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திமுக ஆட்சியே காமராஜர் ஆட்சிதானே என ஒரே போடு போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், கோவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் நடைபெற்றது. அதில் பேசிய செல்வபெருந்தகை, ”காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் சிறப்புமிக்க தலைவர்களை பெற்று இருக்கிறோம். தேர்தல் கூட்டணி என்பது வேறு; இயக்கத்தை வலிமைப்படுத்துவது என்பது வேறு, இப்போதைய சூழலில் ராகுல் காந்தியின் கரத்தை பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இளைஞர்கள் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைத்துக் கொள்ள தயாராக இருக்கிறார்கள். கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள் கூட வாட்ஸ்அப் டிபியில் ராகுல் காந்தியின் படத்தை வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் பேரியக்கத்தை தமிழகத்தில் முதன்மை கட்சியாக மாற்றுவதற்கு ஆலோசனைகளை நிர்வாகிகள் வழங்க வேண்டும். பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியை அமைப்பதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் சபதம் ஏற்க வேண்டும்” என பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, காமராஜர் ஆட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் கூறியவர், “காங்கிரஸ் பேரியக்கத்தை வலிமைப்படுத்துவதற்கான நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம் என்றவர், சிறிய கட்சிகளான நாம் தமிழர், பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்போம் என்று சொல்லும் போது, தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சி அமைக்க ‘காங்கிரஸ்’ ஆசைப்படக் கூடாதா? காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் அந்த முயற்சியை எடுப்பதற்கு எந்த பிரச்சினையும் இருப்பதாக தெரியவில்லை.
எங்களுடைய கட்டமைப்பு வலிமை பெற்றால் தோழமைக் கட்சிகளின் கட்டமைப்பும் வலிமை பெறும். இது எங்களது ஜீவாதார உரிமை என்பதால், கட்சியின் கட்டமைப்பை வலிமைப்படுத்தி கொண்டிருக்கிறோம்.
திமுகவுடன் உண்மையான தோழமையுடன் இருக்கிறோம். திமுகவை விமர்சிக்கும் கட்சிகளை முதலில் எதிர்ப்பது காங்கிரஸ் தான். தோழமை என்பது வேறு, எங்களது கட்டமைப்பை வலிமைப்படுத்துவது என்பது வேறு. இரண்டையும் ஒன்றாக பார்க்கக் கூடாது. என்றார்.
இதையடுத்து, அடுத்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவீர்களா, திமுக கூட்டணி கிடையாதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அதுகுறித்து காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும் என்றவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும் என்றவர், காமராஜரின் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பது எங்களது வழித்தோன்றல்களின் ஆசை, அதற்கான முன்னெடுப்பை மேற்கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்தார்.