டில்லி

பிரதமர் மோடி எதையும் பேசும் முன்பு சரித்திரத்தை படித்து விட்டு பேச வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பிரதமர் மோடி பிரசாரம் செய்து வருகையில் கூறிய ஒரு நிகழ்வு பரபரப்பு ஆகி உள்ளது.   மோடி எப்போதுமே காங்கிரஸ் தலைவர் நேருவைப் பற்றி குறை கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.   அத்துடன் ராணுவத்தினரை பற்றியும் தகவல்கள் கூறி வருகிறார்.   அவற்றில் பெரும்பாலானவை தவறாக உள்ளதால் அடிக்கடி சர்ச்சைகள் உருவாகி வருகிறது.

மோடி சமீபத்தில் ஒரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், “தேசிய தலைவர்கள்,  மற்றும் சரித்திரத்தை மறந்து விட்டு காங்கிரஸ் பேசி வருகிறது.   கடந்த 1949 ஆம் ஆண்டு பாகிஸ்தான் யுத்தத்தில் பெரும் பணி ஆற்றிய ராணுவ தலைமை அதிகாரி திம்மையாவை அப்போதைய பிரதமர் நேருவும் பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ண மேனனும் மதிக்கவில்லை.  அதனால் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.  அதேபோல் அவர்கள் ஜெனரல் கரியப்பாவையும் மதிக்கவில்லை” என பேசி உள்ளார்.

இதற்கு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்திப் சிங் சுர்ஜிவாலா தனது டிவிட்டரில், “மோடிஜி, தாங்கள் துண்டுச் சீட்டில் இருப்பதை படிப்பதற்கு முன்பு சரித்திரைத்தை ஒழுங்காக படிக்க வேண்டும்.  ஜெனரல் திம்மையா 1957ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதி ராணுவ தலைமை அதிகாரி பொறுப்பேற்றார், 1947ல் அல்ல.  கிருஷ்ண மேனன் 1947-52 இந்திய தூதராக பிரிட்டனில் பணி ஆற்றினார். நீங்கள் தெரிவித்தது போல் அப்போது அவர் பாதுகாப்பு அமைச்சர் இல்லை: என பதில் அளித்துள்ளார்.