திருவனந்தபுரம்
கேரள முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு  தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் எனக் காங்கிரஸும் பாஜகவும் கோரி உள்ளன.

ஐக்கிய அரபு அமீரக தூதரகம் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலையொட்டி கடந்த ஜூன் மாதம் 30 கிலோ தங்கம் வைக்கப்பட்ட பார்சல் பறிமுதல் செய்யப்பட்டது.  இதன் மதிப்பு ரூ.15 கோடி என கூறப்பட்டுள்ளது. இந்த பார்சலை வாங்க வந்திருந்த சஜீத் என்பவரை சுங்கத்துறை கைது செய்துள்ளது  சுஜித் இடம் நடத்திய விசாரணையில் தூதரகத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்குத் தொடர்பு உள்ளது தெரிய வந்தது.
காவல்துறையால் தேடப்படுவதை அறிந்த ஸ்வப்னா தலைமறைவாகி உள்ளார்.   ஸ்வப்னா சுரேஷ் ஐடிபிரிவின்நிர்வாக செயலாளராக இருப்பதும் அவர் அந்த துறையின் செயலர் சிவசங்கரனுக்கு நெருக்கமானவர் எனவும் தெரிய வந்துள்ளது.  சிவசங்கரன் கேரள முதல்வர் பினராயி விஜயனின் தனிச்செயலராகக் கூடுதலாகப் பதவி வகித்து வந்தார்.   அவர் மீது புகார் எழுந்ததால் அவர் இரு பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இதையொட்டி காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் இந்த கடத்தலில் முதல்வரின் தனிச் செயலருக்குத் தொடர்பு இருப்பதால் முதல்வர் மீது குற்றம் சாட்டின.  அத்துடன் பினராயி விஜயனிடம் இரு கட்சிகளும் தொடர்ந்து கடத்தல் மற்றும் ஸ்வப்னா சுரேஷ் குறித்து கேள்வி மீது கேள்வியாகக் கேட்டு வருகின்றன.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான ரமேஷ் சென்னிதலா  மோடிக்கு இந்த கடத்தல் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.   இதே கோரிக்கையை பாஜகவும் வலியுறுத்தி உள்ளது.   மேலும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு விசாரணையை எதிர் கொள்ள வேண்டும் என இரு கட்சிகளும் கூறி உள்ளன.