புதுடெல்லி: ‘நமோ டிவி’ என்ற பெயரில் தொலைக்காட்சி சேனல் துவங்கப்பட்டுள்ளது குறித்து, காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் தேர்தல் கமிஷனில் புகார் செய்துள்ளன.
இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்று அக்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஞாயிறன்று துவங்கப்பட்ட இந்த சேனல், பெரும்பாலான டிடிஎச் தளங்களில் காணக் கிடைக்கிறது. இந்த சேனலின் உரிமையாளர் குறித்து எந்த விபரமும் இல்லாததோடு, இந்தியா வலைதளத்தின் தேசிய இணையதள பரிமாற்றத்திலும், இதன் வலைதள பதிவு குறித்து எந்த விபரங்களும் காணப்படவில்லை என அக்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்த சேனல் துவக்கப்பட்டுள்ளதை, பாரதீய ஜனதாவின் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
எனவே, இந்த சேனலுக்கான நிதி ஆதாரம் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டுமென்பதோடு, அதில் ஊழல் நடந்திருந்தால், பாரதீய ஜனதா கட்சியின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– மதுரை மாயாண்டி