வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணம் அனைத்தும் மீட்கொணரப்பட்டு, இந்தியர் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்பது போன்ற பல அசகாய வாக்குறுதிகளை சொல்லியே கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடி, சொல்லிய எதையும் செய்யவில்லை என்றாலும்கூட பரவாயில்லை.
ஆனால், மக்களிடம் இருந்தவற்றையும் பிடுங்கி, அவர்கள் அதுவரை வாழ்ந்துவந்த ஓரளவு நிம்மதியான வாழ்க்கையையும் அவர் நாசம் செய்துவிட்டார் என்பதே, மக்களின் வாழ்நிலையை எதிரொலிக்கும் பல விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
மோடியின் ஆட்சி முடிவடையும் இந்தத் தருவாயில், பட்ட காயம் ஆறுமா? ஆறாதா? என்று பலரும் தவித்துவரும் வேளையில், பலவகையான தயாரிப்புகளுக்குப் பின்னர், காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை, பெரியளவில் ஆறுதலையும் நம்பிக்கையையும் தருவதாக உள்ளது என்பதும் அந்த விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
நம்பிக்கையும் ஆறுதலுமட்டுமல்லாது, அந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் பெருவாரியான அம்சங்கள், இந்த இக்கட்டான சூழலில், நாட்டிற்கு அவசியம் தேவையான ஒன்று என்று அந்த அறிக்கையை வரவேற்கும் பெருவாரியானவர்கள் கூறுகிறார்கள்.
எனவே, அந்த விமர்சகர்களை இந்தளவிற்கு கவர்ந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், என்னென்ன அம்சங்கள் பொதிந்துள்ளன என்பதை நாமும் ஒரு மேலோட்டமான பார்வை பார்த்துவிடலாமே..!
“நாங்கள் செய்வோம்”
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையினுடைய அட்டைப் பக்கத்தில் இருக்கும் வாசகம் இதுதான்.
“வளத்திற்கும் நலத்திற்குமான இணைப்பு”
என்ன இது? வித்தியாசமான கோஷமாக இருக்கிறதே என்கிறீர்களா? இதுதான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் தாரக மந்திரம்..!
வேலைவாய்ப்பின்மை, வேளாண் பேரிடர் மற்றும் பெண்களின் பாதுகாப்பு ஆகிய மூன்றும்தான், 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் பிரதான கவனம் ஈர்க்கும் அம்சங்கள் என்கின்றனர் அக்கட்சியினர்.
ஆனால், தமிழ்நாட்டு மக்களாகிய நமக்கோ, அவற்றுடன் சேர்த்து, நீட் தேர்வு மற்றும் கல்வி உரிமை போன்ற அம்சங்களும் பிரதான அம்சங்களாகவே கருதப்படும்.
நீட் தேர்வு ரத்து
* தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்களில் பெரும் எதிர்ப்பை சந்தித்து, பல மாணாக்கர்களின் உயிரையும் குடித்த நீட் தேர்வு, ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, யாருக்கு மகிழ்ச்சியைத் தருகிறதோ இல்லையோ, தமிழக சூழலில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
* நீட் தேர்வு ரத்துசெய்யப்பட்டு, அதற்கு பதிலாக அதே தரத்தில், மாநில அளவிலான ஒரு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் மாநில மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெறும்.
மாநிலப் பட்டியலில் கல்வி
* இன்னொரு முக்கிய சர்ச்சைக்குரிய விஷயத்திலும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஆறுதல் தருவதாக உள்ளது. அதுதான், பள்ளிக் கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்ப்பது.
* தற்போதைய நிலையில், மத்தியப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பள்ளிக் கல்வி உரிமை, மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே மாற்றப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், உயர்கல்வியானது, மத்தியப் பட்டியலிலேயே தொடர்ந்து நீடிக்கும்.
* மேலும், பள்ளிக் கல்வி, முதல்தர மற்றும் இரண்டாந்தர மருத்துவ வசதிகள், குழந்தை ஊட்டச்சத்து, குடிநீர், சுகாதாரம் மற்றும் மின்சார பகிர்மானம் உள்ளிட்ட முக்கியமான விஷயங்களில், மாநில அரசுகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியாய்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் கதாநாயக அம்சமாக அக்கட்சியினரால் குறிப்பிடப்படுவது நியாய் (நியூந்தம் ஆய் யோஜனா) என சுருக்கமாக அழைக்கப்படும் வறுமை ஒழிப்புத் திட்டமாகும். இத்திட்டத்தை, வறுமையின் மீது நிகழ்த்தப்பட்ட துல்லியமான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்று வர்ணித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி.
இதன் சில முக்கியம்சங்கள்;
* அதீத வறுமையில் வாடும் நாட்டின் 5 கோடி குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு இத்திட்டத்தினுள் கொண்டுவரப்படுவார்கள்.
* அந்தக் குடும்பங்களுக்கு ஆண்டிற்கு தலா ரூ.72,000 வங்கிக் கணக்கில் சேர்ந்துவிடும். அதாவது, குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் சென்றடையும்.
* இத்திட்டம் செயல்பாட்டிற்கு வருவதற்கு முன்னர், விரிவான பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். இத்திட்டம் ஒவ்வொரு கட்டமாக நடைமுறைப்படுத்தப்படும்.
* திட்ட செயலாக்கம் என்று வருகையில், முதலாமாண்டில் இத்திட்டத்திற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1%க்கும் குறைவான தொகையே தேவைப்படும். அதன்பிறகு, இரண்டாம் மற்றும் அடுத்தடுத்த ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2%க்கும் குறைவான தொகையே தேவைப்படும்.
* காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்ததும், இத்திட்டம் குறித்த ஆய்வில் ஈடுபட, பொருளாதார நிபுணர்கள், சமூகவியல் மற்றும் புள்ளியில் அறிஞர்கள் அடங்கிய தனிக்குழு அமைக்கப்படும்.
* மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பங்காற்றும் திட்டமாக இது செயல்வடிவம் பெறும்.
* புதியவகை வருவாய் மற்றும் செலவினங்களை பகுப்பாய்வு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம், இத்திட்டத்திற்கு தேவையான நிதியாதாரங்கள் பெறப்படும்.
* ரகுராம் ராஜன் உள்ளிட்ட பல புகழ்பெற்ற பொருளாதார மேதைகள், இத்திட்டத்திற்கான நடைமுறை சாத்தியம் குறித்து ஆமோதித்துள்ளனர்.
வேளாண்துறை சார்ந்த அம்சங்கள்
சுதந்திர இந்திய வரலாற்றிலேயே, அனைவருக்கும் அன்னமிடும் விவசாயிகள் கடும் அவமானங்களை சந்தித்த காலகட்டமாக மோடியின் ஆட்சிகாலம் இருந்தது என்று சொல்வதே பொருத்தமானது. பலமாநில விவசாயிகளும் டெல்லியில் பல போராட்டங்களை நடத்தினார்கள் என்றாலும், தமிழக விவசாயிகள் நடத்தியப் போராட்டம் மிகக் கடுமையானது.
மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க, அரைநிர்வாண போராட்டம், முழு நிர்வாண போராட்டம் என்று தொடர்ந்து, உச்சகட்டமாக மலம் தின்னும் போராட்டம்கூட நடத்திப் பார்த்துவிட்டார்கள் தமிழக விவசாயிகள். ஆனால், பல நடிகைகளையும், முதலாளிகளையும் சந்திக்க உடனே அனுமதி கொடுத்த நரேந்திர மோடி, இதயங்களை நொறுங்கச் செய்யும் போராட்டங்களை நடத்திய விவசாயிகளை, கடைசிவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
மேலும், சுதந்திரம் பெற்ற பிறகும், தொடர்ந்த பல பத்தாண்டுகள், ஆங்கிலேயர் பாணியைப் பின்பற்றி ரயில்வேக்கென்று தனி பட்ஜெட் போடும் மத்திய அரசு, இந்த நாட்டின் முதுகெலும்பும் சுவாசமுமாக இருக்கும் வேளாண்மைக்கென்று ஒரு தனி பட்ஜெட் போடாதது ஏன்? என்ற கேள்வி நீண்ட நாட்களாக இருந்து வந்தது. ஆனால், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அதற்கான விடை கிடைத்துள்ளது.
மேலும், வேளாண்மை மேம்பாடு தொடர்பாக வேறுபல அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. அவை உங்களின் பார்வைக்கு;
* இந்தியாவில் ரயில்வே துறைக்கென்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறை இருந்தது. தற்போது அந்த நடைமுறை கைவிடப்பட்டுள்ளது என்றாலும், இனிமேல், தனி ரயில்வே பட்ஜெட் போன்ற நடைமுறையில் வேளாண்மைக்கென்று ‘கிஸான் பட்ஜெட்’ என்ற பெயரில் ஒரு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
* வேளாண் உற்பத்தி சந்தைப் பொருள் சட்டத்தை ரத்துசெய்து, வேளாண் ஏற்றுமதி மற்றும் மாநிலங்களுக்கிடையிலான வேளாண் வர்த்தகம் போன்றவை தடையின்றி நடைபெற வழிவகை செய்யப்படும்.
* வங்கிகளில் கடன் நிலுவை வைத்திருக்கும் விவசாயிகளின் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பது தடுக்கப்பட்டு, அந்த நிலை, சிவில் வழக்காகவே கையாளப்படும்.
* வேளாண்துறை மேம்பாடு மற்றும் வேளாண்மை செயல்பாடுகளை லாபகரமாக மேற்கொள்வது உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்யும் பொருட்டு, ஒரு நிரந்தரமான தேசிய கமிஷன் அமைக்கப்படும்.
* முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுகளால், 2006ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட வன உரிமைச் சட்டத்திலும், 2013ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்தல் சட்டத்திலும் உட்புகுத்தப்பட்ட தீங்கு தரும் அம்சங்கள் களையப்பட்டு, அந்தச் சட்டங்களின் உண்மையான நோக்கங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
வேலைவாய்ப்பு தொடர்பான அம்சங்கள்
2014ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, மோடியின் கவர்ச்சிகரமான மற்றும் நம்பிக்கை தரும் வாக்குறுதிகளில் ஒன்றுதான், ஆண்டிற்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்பது. ஆனால், நிலைமை என்ன ஆனது?
இத்தகைய ஒரு விரக்தியான சூழலில்தான், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், வேலைவாய்ப்புகள் குறித்து பல நம்பிக்கை தரும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவை;
* தொழில்துறை, சேவைகள் மற்றும் வேலைவாய்ப்பிற்கான தனி அமைச்சகம் உருவாக்கப்படும். இதன்மூலம், புதிய தொழில்துறை, சேவைகள் துறை ஆகியவற்றினுடைய வளர்ச்சி இணைக்கப்படுவதுடன், வேலைவாய்ப்புகளை வெகுவிரைவாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
* காங்கிரஸ் அரசு அமைக்கப்பட்ட ஓராண்டிற்குள், மத்திய அரசுத் துறைகள், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், நீதிமன்றம் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றில் காலியாக உள்ள 4,00,000 பணியிடங்கள் நிரப்பப்படும்.
* கல்விக்கென ஒதுக்கப்படும் தொகை, மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து 6% என்பதாக அதிகரிக்கப்படும். மேலும், சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்படும் தொகையும் 3% என்ற அளவிற்கு உயர்த்தப்படும்.
* உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஆதாரத்தைப் பகிரும் வகையில், கிராமப் பஞ்சாயத்துக்கள், குடிமை அமைப்புகள் மற்றும் மாநில அரசுகளிடம், அனைத்து காலிப் பணியிடங்களிலும் உரியவர்களை நியமிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படும். இந்தக் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை சுமார் 20 லட்சம் என்று மதிப்பிடப்படுகிறது.
* மேலும், ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி அமைப்பிலும், ‘சேவா மித்ரா’ பணியிடங்களை உருவாக்குமாறு மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்படும். இந்தப் பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 10 லட்சம்.
சிறுகுறு நடுத்தர தொழில்துறை
பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. போன்ற நடவடிக்கைகளால், சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள் பெரியளவில நசிந்தன. பல தொழில்கள் இல்லாமலேயே போயின.
நாட்டுப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் இத்துறைக்கு, காங்கிரஸ் கட்சி மறவாமல் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. அதுதொடர்பான அறிவிப்புகள்;
* இத்துறையை வரையறை செய்யும்போது, ‘மூலதன அளவு(employed capital)’ என்றே குறிப்பிடுகின்றனர். ஆனால், அந்த வரையறையை மாற்றி அதற்கு பதிலாக, ‘பணியாளர் அளவு(number of people employed)’ என்பதாக மாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், 10 அல்லது அதற்கும் குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் பணிசெய்தால் அது குறுந்தொழில்துறை. 11லிருந்து 100 வரையிலான நபர்கள் பணிசெய்தால் அது சிறுதொழில்துறை. 101 லிருந்து 500 வரையிலான நபர்கள் பணிசெய்தால் அது நடுத்தர தொழில்துறை என்பதாக வரையறை செய்யப்படும்.
* தொழில்முனைவோருக்கு பயன்படும் வகையில், தொழில்துறை உதவி முகமை என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்படும்.
* சிறுகுறு தொழில்துறைகளுக்கு 3 ஆண்டுகள் வரை, நிதி தொடர்பான, ‘ஒழுங்குமுறை காத்திருப்பு கால (regulatory forbearance)’ சலுகையும் வழங்கப்படும். இதனடிப்படையில், 3 ஆண்டு காலத்திற்கு, அத்தொழில் துறையினர், சம்பந்தப்பட்ட அனைத்து சட்டதிட்டங்கள் மற்றும் விதிமுறை சார்ந்த நடைமுறைகளிலிருந்து விலக்குப் பெற்றிருப்பார்கள். ஆனால், குறைந்தபட்ச ஊதியச் சட்டம் மற்றும் வரிசார்ந்த சட்டங்கள் செல்லுபடியாகும்.
* சி.எஸ்.ஆர். நிதிப் பங்களிப்பை குறைப்பதன் மூலமாகவும், நேரடி வரிவிகித செயல்பாட்டை குறைப்பதன் மூலமாகவும், புதிய பணிவாய்ப்புகளை உருவாக்கும் தொழில் நிறுவனங்களுக்கு விருதுகள் அளிக்கப்படும்.
* ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கு குறைந்த வரிவிதிப்பு சலுகை அளிக்கப்படுவதோடு, போதியளவு நிதியாதாரம் உள்ள ஒரு சுற்றுலா மேம்பாட்டு வங்கியும் அமைக்கப்படும். இந்த வங்கியின் மூலம், சுற்றுலா தொழில்கள் மேம்படுத்தப்பட்டு, சுற்றுலா வாயிலாக கிடைக்கும் வருவாயின் மீது குறைந்தளவு வரிவிதிப்பிற்கும் ஆவண செய்யப்படும்.
வரி விதிப்பு
வரிவிதிப்பு என்றாலே, மோடி அரசின் ஜி.எஸ்.டி. தான் பலரின் நினைவிற்கும் வந்து நிம்மதியை குலைக்கிறது. வியாபாரிகளை மட்டுமல்ல, கடைகளுக்கோ அல்லது உணவகங்களுக்கோ செல்லும் சாமானிய மக்களையும் அலறச் செய்த பெருமையுடையதுதான் மோடி அரசின் ஜி.எஸ்.டி.
அந்த பாதிப்பிலிருந்து மீண்டுவர, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என பார்ப்போமா..!
* காங்கிரஸ் ஆட்சியமைந்த ஓராண்டிற்குள், நேரடி வரிக் குறியீடு அமல்படுத்தப்படும்.
* தற்போது நடைமுறையில் இருக்கும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை நீக்கப்பட்டு, அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும், ஒற்றை, நடுத்தர மற்றும் தரநிலை விகித அடிப்படையிலான, ‘ஜி.எஸ்.டி. 2.0 பதிப்பு’ அமலுக்கு கொண்டுவரப்படும். இந்த விகிதமானது, மத்திய – மாநில அரசுகளின் தற்போதைய மறைமுக வரி வருவாயுடன் ஒப்பிடுகையில், நியாயமான நடுத்தர வருவாயாக இருக்கும்.
அதேசமயம், இந்தப் புதிய நடைமுறையின் கீழ், தரமற்ற பொருட்களுககு சிறப்பு வரிவிதிப்பும் உண்டு.
* ரியல் எஸ்டேட் துறை, பெட்ரோலியப் பொருட்கள், புகையிலை மற்றும் மதுபான வகைகள் போன்றவை, இரண்டு ஆண்டுகளில், புதிய ஜி.எஸ்.டி. நடைமுறைக்குள் கொண்டுவரப்படும். (பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் கீழ் கொண்டுவர வேண்டுமென்ற கோரிக்கை பல நாட்களாக இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.)
* ஏற்றுமதி பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு எந்த ஜி.எஸ்.டி. வரிவிதிப்பும் கிடையாது.
* மின்னணு வழி கட்டண முறை ஒழிக்கப்படும்.
* ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தின் முழு நிகழ்ச்சி நிரலும் பொதுத்தளத்தில் வெளியிடப்படும்.
புதிய திட்டக் கமிஷன்
* பாரதீய ஜனதா அரசால், திட்டக் கமிஷனுக்குப் பதிலாக உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பு ஒழிக்கப்படும்.
* புகழ்பெற்ற பொருளாதார அறிஞர்கள் மற்றும் நிதித்துறை வல்லுநர்களை உறுப்பினர்களாகக் கொண்ட புதிய திட்டக்குழு அமைக்கப்படும். திட்டக்குழுவிற்கு உதவிசெய்ய பணியாளர்களும் இருப்பார்கள். ஆனால், நபர்களின் எண்ணிக்கை 100 ஐ தாண்டாது.
தொழில்துறை திட்டம்
* ‘உலகளாவிய கொள்கைக்காக உருவாக்குதல்’ என்ற திட்டத்தின்கீழ், ஏற்றுமதி நோக்கத்திற்காக மட்டுமே முதலீடு செய்யும் வகையில், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தொழில் நிறுவனங்ளுக்கு அழைப்பு விடுக்கப்படும். அத்தகைய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்கள், குறைந்தளவு கார்ப்பரேட் வரி மட்டுமே செலுத்தும்.
ஊரக மேம்பாட்டு அம்சங்கள்
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தின் மூலம், தற்போது ஆண்டிற்கு 100 நாட்கள் வழங்கப்படும் ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், 150 நாட்களுக்கான திட்டமாக மாற்றப்படும்.
* அந்த வேலைவாய்ப்புகளின் மூலம் நீர் நிலைகள் & நீராதாரங்களைப் பாதுகாத்தல் மற்றும் தரிசு நிலங்களை மேம்படுத்தல் ஆகியவை மேற்கொள்ளப்படுவதோடு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்ட நிதி, ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பயன்மிகு பொதுச் சொத்துக்களை நிர்மாணிக்கப் பயன்படுத்தப்படும்.
* மேலும், ஊரக குடும்பங்களுக்கான வீட்டுத் தோட்ட உரிமைச் சட்டமும் நிறைவேற்றப்படும்.
வங்கிகள் இணைப்பு
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டு, நாடு முழுவதும் 6 முதல் 8 பொதுத்துறை வங்கிகளே சிறப்பான முறையில் இயங்கும் வகையில் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
பொருளாதாரக் கொள்கை
நாட்டின் பொருளாதார பாதுகாப்பிற்காக, ரிசர்வ் வங்கி வைத்திருக்கும் காப்புத்தொகையின் ஒரு பகுதியை தொடர்ந்து கேட்டது மற்றும் அந்த வங்கியின் விருப்பத்தை மீறி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் மோடி அரசின் மீது உள்ளன.
அந்தவகையில், ரிசர்வ் வங்கி மற்றும் சில பொருளாதார கொள்கைகள் குறித்து காங்கிரஸ் குறிப்பிட்டுள்ள அம்சங்கள்;
* ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடாது.
* தொடக்க நிலை தொழில் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் ஏஞ்சல் வரி முற்றிலும் ரத்துசெய்யப்படும்.
* மையமற்ற மற்றும் வியூகமற்ற மத்திய பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து பங்குகள் விலக்கிக் கொள்ளப்படும்.
நீதித்துறை சீர்திருத்தம்
* உச்சநீதிமன்றத்தை அரசியல் சாசன நீதிமன்றமாக மாற்றும் வகையில் திருத்தம் செய்ய, நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும். இதன்மூலம், அரசியல் சாசன விளக்கம் தொடர்பான வழக்குகள், சட்ட மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரிக்க வழியேற்படும்.
* தனியாக மேல்முறையீட்டு நீதிமன்றம் அமைக்கப்படும். இதன்மூலம், உயர்நீதிமன்ற தீர்ப்புகளை எதிர்த்து மேல்முறையீடு செய்வது எளிதாகும்.
– மதுரை மாயாண்டி