டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான 2கோடி கையெழுத்து பெறப்பட்ட மனுவை ராகுல்காந்தி உள்பட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் வழங்கினர். அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என ஆவேசமாக தெரிவித்தார்.
மத்தியஅரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் முகாமிட்டு கடும் குளிரிலும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இன்று 29வது நாளாக போராட்டம் தொடர்கிறது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியும் போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகிறது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் குடியரசுத் தலையிட்டு, வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, மனு தயாரிக்கப்பட்டு, அதில், நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த சுமார் 2 கோடி பேரிடம் அந்த கட்சியினர் கையெழுத்து பெற்று உள்ளனர்.
இந்த 2 கோடி கையெழுத்துக்கள் அடங்கிய கோரிக்கை மனு ஏற்றப்பட்ட வாகனத்துடன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேரணியாக சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து அழைத்துச்சென்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுதது, ராகுல்காந்தி உள்பட மூத்த தலைவர்கள் சிலர் சென்று குடியரசுத்தலைவரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ராகுல்காந்தி, குலாம்நபி ஆசாத், ஆதிர் ரஞ்சன் சவுத்திரி ஆகியோர் ராஸ்டிரபதி பவன் சென்று குடியரசுத் தலைவரை சந்தித்து மனு கொடுத்தனர்.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, “இந்த பண்ணை சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை என்று நான் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாகவும் . இந்த சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருவதையும் சுட்டிக்காட்டியதாக கூறினார்.
இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்று ஆவேசமாக கூறியவர், அது ஆட்சியாளர்களின் கற்பனையில் இருக்கலாம், ஆனால் உண்மையில் இல்லை என்றும் கடுமையாக சாடினார்.