சென்னை: காஷ்மீரில் இண்டியா கூட்டணியின் வெற்றி ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
90 தொகுதிகளைக்கொண்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 8ந்தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸின் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. தேசிய மாநாட்டு கட்சி மட்டும் 42 இடங்களை கைப்பற்றி உள்ள நிலையில், கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி 6 இடங்களை கைப்பற்றி உள்ளது. பாஜக தனித்து 29 இடங்களை கைப்பற்றி உள்ளது. மேலும் இண்டியா கூட்டணியில் உள்ள சில உதிரி கட்சிகளும் சில இடங்களை கைப்பற்றி உள்ளதால், இண்டியா கூட்டணி ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க உள்ளது.
இந்த நிலையில், ஜம்மு – காஷ்மீரில் இந்தியா கூட்டணி பெற்ற வெற்றிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “அமோக வெற்றி பெற்ற தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் கூட்டணிக்கும் ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கும் வாழ்த்துகள். இது இந்தியாவுக்கும் ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி. மத்திய பாஜக அரசு அநியாயமாக பறித்த மாநிலத்தின் அந்தஸ்தையும் கண்ணியத்தையும் மீட்டெடுப்பதற்கான மக்களின் முடிவு. ஒவ்வொரு காஷ்மீரியின் நம்பிக்கையை விதைக்கு தருணம் தொடங்கியுள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.