டில்லி:

கோட்சே தேசபக்தர் என்று போபால் தொகுதி பாஜக வேட்பாளர் சாமியாரினி பிரக்யா சிங் கூறிய கருத்து தொடர்பாக பிரதமர்  விளக்கம் அளிக்காமல் மவுனம் காப்பது ஏன்? காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் கேள்வி எழுப்பி உள்ளார்.

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய கமல்ஹாசன், கோட்சேதான் நாட்டின் முதல் இந்து தீவிரவாதி என்று கூறினார். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  போபால் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான சாமியாரினி பிரக்யா சிங்,  ‘நாதுராம் கோட்சே சிறந்த தேச பக்தர் என கூறினார்.

போபால் மக்களவை பா.ஜ.க.வின்  வேட்பாளர்  சாத்வி பிரக்யாசிங், மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டபட்டவர். அவர் மகாத்மா காந்தியின் படுகொலை விவகாரத்தில்,  நாதுராம் கோட்ஸே “தேசபக்தன்” என்று புகழ்ந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து  பாஜக தலைமை அவரை உடடினயாக மன்னிப்பு கோர உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து அவரும் மன்னிப்பு கோரினார்.

இந்த நிலையில், கோட்சேவை போற்றுவது தேசபக்தி அல்ல; தேச துரோகம்  பிரக்யாவின் சர்ச்சை கருத்துக்கு பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில்சிபல், நாட்டுப்பற்று குறித்து பேசும் பிரதமர்  இந்த விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

பிரக்யாவின் கோட்சே தொடர்பான கருத்து பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், இன்று போபால் தொகுதிக்குட்பட்ட  புருஹன்பூரில் பிரக்யா நடத்த இருந்த கடைசி நாள் தேர்தல் பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது. அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக பாஜக சல்ஜாப்பு கூறி உள்ளது.

இதற்கிடையில் பிரக்யாவின் தேச பக்தி பேச்சு குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரி அஹர் மால்வா மத்திய பிரதேச தேர்தல் ஆணையருக்கு விரிவான அறிக்கை அனுப்பி உள்ளார்.