டில்லி
ராஜ்யசபை விவாதத்தின் போது இரண்டு வகை ரூ, 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய காங் இதை கிண்டல் செய்ததோடு இந்த அரசின் மாபெரும் ஊழல்களில் இதுவும் ஒன்று என குற்றம் சாட்டியுள்ளது.
இன்று சீரோ அவர் விவாதத்தின் போது திருணாமுல் காங்கிரஸை சார்ந்த ஒ ப்ரெயின், இரண்டு விதமான ரூ 500 நோட்டுக்களை சபையில் காட்டினார். இரண்டும் வேறுவேறு அளவில் இருந்தன. இந்த நோட்டுக்களை அவர் முதலில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு அளிக்க எடுத்துச் சென்றார். ஆனால் அந்த நோட்டுக்களை அவரிடம் காட்டி விளக்கி விட்டு தானே எடுத்துச் சென்றுவிட்டார்.
காங்கிரஸ் கட்சியின் கபில் சிபல் ”இந்த அரசு உண்மையில் எதற்காக பழைய நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தது என்பது இப்போது மக்களுக்கு தெளிவாக புரிந்து விட்டது. ரிசர்வ் வங்கி இருவேறு அளவில் நோட்டுக்கள் அச்சடித்துள்ளது. இதெல்லாம் எப்படி சாத்தியம் ஆகிறது? ஒன்று ஆளும் கட்சிக்கு மற்றொன்று எதிர்க்கட்சிகளுக்கா?” என வினவினார்.
அதைத் தொடர்ந்து காங்கிரஸின் குலாம் நபி ஆசாத், ”இந்த அரசின் மிகப்பெரும் ஊழல்களில் இதுவும் ஒன்று இதனால் தான் பா ஜ க வுக்கு நிதிகள் வந்து குவிகிறதா” எனக் கூறினார். அவரை ஒ ப்ரெயின், சரத் யாதவ், நரேஷ் அகர்வால் மற்றும் பலர் ஆதரித்து குரல் எழுப்பினார்கள்.
இது குறித்து அருண் ஜேட்லி, “பாராளுமன்றத்தில் ஜீரோ அவருக்கு உள்ள முக்கியத்துவமே இதனால் குறைந்து போகிறது. இது போன்ற அற்பத்தனமான குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படும் நேரம் இது இல்லை. யாரோ ஏதோ காகிதத்தை காட்டுவது சரியில்லை. இந்த நோட்டுக்கள் அவர்களுக்கு எப்படிக் கிடைத்தன என்பதை விளக்க வேண்டும். முற்றிலும் தவறான தகவல் இது” என பதிலளித்தார்.
சபையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டதால் அடிக்கடி சபை ஒத்திவைக்கப்பட்டது.