டில்லி:

சேலம்-சென்னை 8வழிச் சாலைத் திட்டம் குழப்பமாக இருப்பதாகவும், இந்த திட்டம் எதற்காக அமைக்கப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பிய உச்சநீதி மன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

சேலம் சென்னை  இடையே  276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8வழிச்சாலை அமைக்க மத்திய மாநில அரசுகள் முடிவு செய்தன. இதற்காக ரூ.10ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில்,  சாலைப் பணிக்காக  சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 5  மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்து, 2018-ம் ஆண்டு மே மாதம் அதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டது.

இதற்கு அந்த மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் சென்னை உயர்நீதி மன்றத்தையும் நாடினர். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்தது.

இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், திட்ட செயல்பாட்டு பிரிவின் இயக்குனர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யபட்டது.

இந்த மனுமீது ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, தடை நீக்க உச்சநீதி மன்றம் மறுத்து விட்டது. இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது,  8 வழிச் சாலைத் திட்டம் என்பது நாட்டுக்கு முக்கியமானது. எனவே, அதற்காக நிலத்தைக் கையகப்படுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் வாதிடப்பட்டது.

அப்போது, சேலம் – சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டம் எதற்காக அமைக்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியதுடன், இந்த 8 வழிச் சாலை திட்டமே குழப்பமாக இருப்பதாகவும், சேலம் – சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டம் மிக அவசியமான திட்டம் என்கிறீர்கள். ஆனால் சுற்றுச்சூழல் அனுமதி பெற தாமதம் ஆகிறது என்கிறீர்கள். எனவே, இந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் நடைமுறைகள் என்னென்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்தியஅரசுக்கு உத்தரவிட்டனர்.

அதைத்தொடர்ந்து  தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் வாதாடிய வழக்கறிஞர்,  நிலத்தைக் கையகப்படுத்தாமல், சுற்றுச்சூழல் அனுமதி பெற முடியாது என்று கூறினார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், 8 வழிச் சாலை திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தர தாமதமானால் என்ன செய்வீர்கள்? என்று  கேள்வி எழுப்பினர்.

‘இதற்கு பதில் அளித்த தேசிய நெடுஞ்சாலை துறை  வழக்கறிஞர், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் 8 வழிச் சாலைத் திட்டத்தை தொடங்க மாட்டோம் என்று உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.