அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும் உலகின் முன்னணி கால்பந்து வீரருமான லியோனல் மெஸ்ஸி ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா அணியுடனான தனது ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டார்.
34 வயதாகும் மெஸ்ஸி தனது 13 வது வயதில் பார்சிலோனா அணிக்காக விளையாட துவங்கினார் கடந்த 20 ஆண்டுகளாக இந்த கால்பந்து கிளப்பிற்காக விளையாடி வந்த மெஸ்ஸி தொடர்ந்து தங்கள் கிளப்பிற்காக விளையாட மாட்டார் என்று பார்சிலோனா கால்பந்து கிளப் அறிவித்திருக்கிறது.
கால்பந்து சீசன் ஒவ்வொன்றுக்கும் சுமார் 5200 கோடி ரூபாய் செலவு செய்யும் இந்த கிளப் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் அணியின் செலவினங்களை 3000 கோடி ரூபாயாக குறைத்துள்ளது.
கடந்த நான்கு சீசன்களாக போனஸ் மற்றும் இதர செலவினங்கள் இல்லாமலே மெஸ்ஸியின் சம்பளம் மட்டும் ரூ. 1250 கோடி செலவாகும் நிலையில் வரும் சீசனில் அவருக்கான சம்பள விவகாரம் குறித்து சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து பார்சிலோனா கால்பந்து கிளப்பை விட்டு வெளியேறும் மெஸ்ஸி அடுத்ததாக மான்செஸ்டர் சிட்டி அல்லது பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் கிளப்புக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.