திருவள்ளூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தண்டனை காலம் முடிவடைந்து விடுதலையாகி வரும் நிலையில், இளவரசி, மற்றும் சுகாதாரனின் சொத்துக்கள் உச்சநீதிமன்ற உத்தரவுபடி அரசுடைமை ஆக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே சென்னை உ காஞ்சிபுரம், செங்கல்பட்டு ,தஞ்சை மற்றும் தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களில் முறைகேடாக சேர்த்த பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, திருவள்ளுர் மாவட்டத்திலும் இளவரசி, சுகதாரனுக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலையான நிலையில், அபாராதத்தொகை 10 கோடி ரூபாய் செலுத்தாததால் சுதாகரன் மட்டும் சிறையில் உள்ளார். இந்த நிலையில், 2017-ம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான, சில சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.
அந்த இறுதி தீர்ப்பின் அடிப்படையில் இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் தமிழகஅரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது திருவள்ளூரில் இளவரசி ,சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் இளவரசி ,சுதாகரனுக்கு சொந்தமான 41.22 ஏக்கர் நிலம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.