பெங்களூரு:
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூலை இறுதி வரை அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 2 வரை 5 ஞாயிற்றுக்கிழமை முழு அடைப்பு நடைபெறும் என்று கர்நாடக அரசு அறிவித்து உள்ளது.
அதே வேளையில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்கனவே, நிர்ணயிக்கப்பட்ட திருமணங்கள் நடத்த அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலையடுத்து, ஜூலை 5 முதல் கர்நாடகா முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுவதாக கடந்த சனிக்கிழமை கர்நாடக அரசு தெரிவித்தது.
மேலும், இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு இருக்கும் என்றும், இது ஜூன் 29 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் முடிவு அறிவிக்கப்பட்டது. இந்தக் காலக்கட்டத்தின் போது, அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்களைத் தவிர வேறு எந்த நடவடிக்கைகளும் அந்த நாளில் அனுமதிக்கப்படாது என்று முதல்வர் எடியூரப்பா கூறியிருந்தார்.
இந்த நிலையில், கர்நாடக தலைமைச் செயலாளர் டி.எம்.விஜய் பாஸ்கர் பிறப்பித்துள்ள உத்தரவில், மத்தியஅரசு வழங்கிய அன்லாக் 2 வழிகாட்டுதல்கள் மாநிலத்தில் இது ஜூலை 31 வரை நடைமுறையில் இருக்கும்.
ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 2 வரை கர்நாடகாவில் ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையான பூட்டுதல் இருக்கும் என்றும், இந்த நாட்களில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அத்தியாவசிய நடவடிக்கைகள் மற்றும் திருமணங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
திருமணம் தொடர்பான கூட்டங்களில் விருந்தினர்களின் எண்ணிக்கை 50 ஐத் தாண்டக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.