டெல்லி: பிரபல தொலைக்காட்சி நெறியாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக நாடு முழுவதும் பல மாநிலங்களில் காங்கிரசார் புகார் அளித்துள்ளனர்.
கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தருணத்தில் மகாராஷ்டிராவில் பால்கர் என்னுமிடத்தில் 2 சாமியார்கள் உட்பட 3 பேர் மீது திருடர்கள் என்று நினைத்து அப்பகுதியில் உள்ளவர்கள் தாக்குதல் நடத்தினர்.
தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 3 பேரும் உயிரிழந்து விட்டனர். இது தொடர்பான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . அதன் பிறகு, ரிபப்ளிக் என்ற பிரபல தொலைக்காட்சியில் இது தொடர்பான விவாதம் ஓன்று நடைபெற்றது.
விவாதம் சர்ச்சைக்கு பெயர் பெற்ற நெறியாளர் அர்னாப் கோஸ்வாமி தலைமையில் நடைபெற்றது. அப்பொழுது பேசிய அர்னாப், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அமைதியாக உள்ளார்.
இந்துக்களுக்கு நடைபெற்ற சம்பவம் என்பதால் அமைதியாக இருக்கிறார். கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்றிருந்தால் அமைதியாக இருந்திருப்பாரா என்று கேள்வி எழுப்பினார். ராகுல் காந்தியை பற்றியும் சர்ச்சையாக பேசினார். அவர் இப்படி கூறியதுதான் இப்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
அவர் மீது பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் புகார்கள் அளித்துள்ளனர். சத்தீஸ்கர் காங்கிரஸின் ஊடகத் தலைவர் ஷைலேஷ் நிதின் திரிவேதி பேசுகையில், கோவிட்19 குறித்த ராகுலின் அறிக்கையை சிதைப்பதன் மூலம் அர்னாப் நாட்டை தவறாக வழிநடத்தியுள்ளார். அதனால்தான் காங்கிரஸ் ஆர்வலர்கள் புகார்களை பதிவு செய்துள்ளனர் என்றார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்கள், மண்டல தலைமையகங்களில் நெறியாளர் கோஸ்வாமிக்கு எதிராக ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டதோடு, புகார்களும் அளித்துள்ளனர்.