டில்லி

லோக்பால் அமைப்பின் தலைமை நீதிபதி ஆன்லைன் மூலம் எம்பி மற்றும் எம் எல் ஏக்கள் மீது ஊழல் புகார்களை அனுப்பும் வசதியைத் தொடங்கி வைத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரிக்க லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டுள்ளது.  இவற்றில் தேசிய அளவில் லோக்பால் மற்றும் மாநில அளவில் லோக் ஆயுக்தா செயல்பட்டு வருகின்றன.   இங்குப் புகார்களை நேரடி முறை, இ மெயில், தபால் வழி மூலம் அளிக்க முடியும்.

தற்போது ஆன்லைன் மூலமும் புகார் அளிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  அதன் படி பொதுமக்கள் தங்கள் புகார்களை lokpalonline.gov.in. என்னும் இணைய தளம் மூலம் எங்கிருந்தும் எப்போதும் அனுப்ப முடியும்.    இம்முறையில் புகார்களின் நிலை குறித்த தகவல் புகார் அளித்தோருக்கு இ மெயில் மற்றும் குறுந்தகவல் மூலம் கிடைக்கும்.

நேற்று இந்த வசதியை லோக்பால் அமைப்பின் தலைமை நீதிபதி பினாகி சந்திர கோஷ் தொடங்கி வைத்துள்ளார்.   அப்போது அவர், இம்முறை பாதுகாப்பானது எனவும் புகார் அளிப்போருக்கு இறுதிக் கட்டம் வரை புகாரின் நிலை தெரிய வருகிறது என்பதால் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளதாக கூறி உள்ளார்.